செய்திகள்
திருமணம்

இப்படியும் விநோதம்... ஒரே சமயத்தில் 2 பெண்களை திருமணம் செய்த வாலிபர்

Published On 2021-01-08 10:28 GMT   |   Update On 2021-01-08 16:01 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்துள்ள பஸ்தர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர், ஒரே சமயத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ளார்.
பஸ்தர்:

இரண்டு பெண்களை திருமணம் செய்தால் இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம் ஆகும். ஒரு ஆண் தன் முதல் மனைவி இறந்துவிட்டாலோ அல்லது முதல் மனைவியை விவாகரத்து செய்தாலோ இரண்டாவது திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால் இந்த சட்டத்தை மீறி பல்வேறு இடங்களில் பலதார திருமண நடைமுறை தொடர்கிறது. இதில், பெரும்பாலான திருமணங்கள், பெண்களின் சம்மதத்துடனே நடக்கின்றன. குறிப்பாக, ஒரே சமயத்தில் 2 பெண்களை அவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்த நிகழ்வுகளும் அரங்கேறி உள்ளன. 

அவ்வகையில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர், ஒரே சமயத்தில் இரண்டு பெண்களை மணந்துள்ளார். அதுவும் அவர்களின் முழு சம்மதத்துடன். 

மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்துள்ள பஸ்தர் மாவட்டத்தின் தொலைதூர கிராமத்தைச் சேர்ந்த அந்த வாலிபரின் பெயர் சந்து மயூர்யா. விவசாயம் மற்றும் விவசாய கூலித் தொழில் செய்து வரும் இவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பழங்குடியின பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். 

ஒரு வருடம் கழித்து அவர் வாழ்வில் இன்னொரு பெண் நுழைந்துவிட்டார். உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்ற இடத்தில், மற்றொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலிக்க தொடங்கினர். 



இதில் விநோதம் என்னவென்றால் இரண்டு பெண்களுக்கும் விஷயம் தெரிந்தும், எந்த பிரச்சனையும் செய்யவில்லை. சந்து மயூர்யாவை தொடர்ந்து காதலித்தனர். இருவரும் சந்து மயூர்யாவின் வீட்டுக்கு வந்து குடும்பம் நடத்தவும் தொடங்கினர். ஒரே வீட்டில் இரண்டு பெண்களை வைத்து குடும்பம் நடத்துவதை ஊரில் உள்ளவர்கள் வாய்க்கு வந்தபடி பேசத் தொடங்கினர். இதனால் இரண்டு பெண்களையும் முறைப்படி திருமணம் செய்ய சந்து மயூர்யா முடிவு செய்தார். 

அதன்படி கிராமத்தினர் முன்னிலையில் சமீபத்தில் அவர்களின் திருமணமும் நடந்து முடிந்தது. ஒரே சமயத்தில் இரண்டு பெண்களையும் கைப்பிடித்த மகிழ்ச்சியில் வாழ்க்கையை தொடர்கிறார் சந்து மயூர்யா.

இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. மாவட்டம் முழுவதும் இந்த திருமணத்தைப் பற்றிய பேச்சுதான். 
Tags:    

Similar News