செய்திகள்
மந்திரி பிரபு சவான்

பசுவதை தடை அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல்: மந்திரி பிரபு சவான்

Published On 2021-01-08 03:46 GMT   |   Update On 2021-01-08 03:46 GMT
கர்நாடகத்தில் பசுவதை தடை அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் பசுவதை தடை சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு மேல்-சபையில் இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதையடுத்து பசுவதை தடைக்கு அவசர சட்டம் பிறப்பிக்க மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. அந்த அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பசுவதை தடை அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதற்காக கவர்னர், முதல்-மந்திரி மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அவசர சட்டத்திற்கு தேவையான விதிமுறைகளை உருவாக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். கடத்தலின்போது மீட்கப்படும் மாடுகளை வளர்க்க பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

சட்டவிரோதமாக கடத்தப்படும் மாடுகள், வதைக்கு உட்படுத்தப்படும் மாடுகள் ஆகியவை மீ்ட்கப்பட்டு கோசாலைகளில் விடப்படும். இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு மாடுகளை வளர்க்க தேவையான நிதி குறித்த விவரங்களை அரசு சேகரித்துள்ளது. பால் சுறக்காத மாடுகளிடம் இருந்து கிடைக்கும் சாணம், கோமியம் ஆகியவற்றில் இருந்து பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை பயன்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும். இதன் மூலம் பசுக்களை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு மந்திரி பிரபுசவான் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News