செய்திகள்
மந்திரி சுதாகர்

கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு 6.30 லட்சம் பேர் பெயர் பதிவு: மந்திரி சுதாகர் தகவல்

Published On 2021-01-08 02:52 GMT   |   Update On 2021-01-08 02:52 GMT
கர்நாடகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) 263 இடங்களில் ெகாரோனா தடுப்பூசி ஒத்திகை நடப்பதாகவும், தடுப்பூசி போட்டுக்கொள்ள 6.30 லட்சம் பேர் பெயர் பதிவு செய்திருப்பதாகவும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
பெங்களூரு :

கொரோனா தடுப்பூசி தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் மாநில சுகாதாரத்துறை மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் கர்நாடகத்தில் இருந்து சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் இருந்தபடி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி வினியோக ஏற்பாடுகள், மத்திய அரசின் உதவிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கர்நாடகத்தில் நாளை (அதாவது இன்று) அனைத்து மாவட்டங்களில் தலா 7 இடங்களில் தடுப்பூசி வினியோகம் செய்வதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது. அதாவது மாநிலம் முழுவதும் 263 இடங்களில் தடுப்பூசி வினியோக ஒத்திகை நடக்கிறது.

24 மாவட்ட ஆஸ்பத்திரிகள், 20 மருத்துவ கல்லூரிகள், 43 தாலுகா ஆஸ்பத்திரிகள், 87 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 30 நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள், 28 தனியார் சுகாதார மையங்களில் இந்த கொரோனா தடுப்பசி ஒத்திகை நடக்கிறது. மத்திய அரசு 24 லட்சம் சிரஞ்சிகளை அனுப்பியுள்ளது. இவை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் 10 நடமாடும் குளிர்பதன கிடங்கு, 4 நடமாடும் பிரிட்ஜ்கள், 3, 201 ஐ.எல்.ஆர். குளிர்பதன கிடங்குகள், 3,039 தீவிரமான குளிர்பதன கிடங்குகள், 3,312 குளிர்பதன பெட்டிகள், 46 ஆயிரத்து 591 தடுப்பூசி எடுத்து செல்லும் பெட்டிகள், 2 லட்சத்து 25 ஆயிரத்து 749 ஐஸ் பெட்டிகள் கர்நாடக அரசிடம் உள்ளன. மத்திய அரசு 225 லிட்டர் திறன் கொண்ட 64 ஐ.எல்.ஆர். குளிர்பதன பெட்டிகளை அனுப்பி வைத்துள்ளது. இன்னும் 3 நடமாடும் குளிர்பதன கிடங்குகளை அனுப்பி வைப்பதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

கர்நாடகத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் 6.30 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தங்களின் பெயர்களை பதிவு செய்துள்ளனர். முதல்கட்டமாக ஒரு கோடி தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கவுள்ளது. போலீசார், சுகாதார பணியாளர்கள், ராணுவ வீரர்களுக்கு முதல்கட்டமாக தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதனால் மக்களுக்கு பயன் ஏற்படும். இந்த விஷயத்தில் அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். வருகிற 17-ந் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 65 லட்சம் குழந்தைகளுக்கு இந்த சொட்டு மருந்து வழங்கப்படும். தட்சிண கன்னடா மாவட்டத்தில் 6 காகங்கள் செத்துள்ளன. அதன் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க கேரள எல்லையில் அமைந்துள்ள கர்நாடக பகுதிகளில் கடுமையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.
Tags:    

Similar News