செய்திகள்
இரட்டை அடுக்கு சரக்கு ரெயிலை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி கொடியசைத்து திறந்து வைத்தபோது எடுத்த படம

உலகின் முதல் இரட்டை அடுக்கு சரக்கு ரெயில் - மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

Published On 2021-01-07 18:56 GMT   |   Update On 2021-01-07 18:56 GMT
உலகின் முதல் இரட்டை அடுக்கு சரக்கு ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சண்டிகார்:

தலைநகர் டெல்லியை, நவிமும்பையுடன் இணைக்கும் வகையில் 1,483 கி.மீ. நீளம் கொண்ட அர்ப்பணிக்கப்பட்ட மேற்கு சரக்கு ரெயில்பாதை திட்டத்தை இந்திய ரெயில்வே நிறைவேற்றுகிறது.

இதன் அங்கமாக 306 கி.மீ. தொலைவு புது ரேவாரி&புது மாடர் பிரிவு சரக்கு ரெயில்பாதை (மின்மயமாக்கப்பட்டது) அமைக்கப்பட்டு விட்டது.

டெல்லியில் நேற்று காணொலி காட்சி வழியாக நடந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு இந்த ரெயில்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அத்துடன் 1.5 கி.மீ. நீளமுள்ள உலகின் முதல் இரட்டை அடுக்கு சரக்கு ரெயிலை (கன்டெய்னர்) பிரதமர் நரேந்திர மோடி் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அரியானா கவர்னர் சத்யதேவ் நாராயண் ஆரியா, ராஜஸ்தான் கவர்னர் கல்ராஜ் மிஷ்ரா, ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், அரியானா முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் உள்ளிட்ட பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த ரெயில்பாதை, அரியானாவில் 79 கி.மீ., ராஜஸ்தானில் 227 கி.மீ. தொலைவை கொண்டுள்ளது. இதன்மூலம் அரியானாவின் ரேவாரி, மானேசர், நர்னால், புலேரா, கிஷன்கார் பகுதியில் உள்ள பல்வேறு தொழில்கள் பலன்பெறும். ராஜஸ்தான் மாநிலமும் பலன் அடையும்.

இந்த விழாவில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:-

நாட்டின் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கான மகாயாக்யா (மாபெரும் வேள்வி) ஒரு புதிய வேகத்தை அடைந்துள்ளது.

இந்த அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு ரெயில்பாதை, 21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும்.

கடந்த 5 அல்லது 6 ஆண்டுகள் மேற்கொண்ட கடின உழைப்புக்கு பின்னர் இன்று மேற்கு சரக்கு ரெயில்பாதையின் ஒரு பிரிவு, நனவாகி இருக்கிறது.

கடந்த 10,12 நாட்களில் பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியாவில தயாரிக்கப்பட்ட 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சொந்த தடுப்பூசி, நாட்டு மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

நாங்கள் நிறுத்தவோ, சோர்வடையவோ இல்லை. நாம் அனைவரும் வேகமாக முன்னேறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News