செய்திகள்
டிராக்டர் பேரணி ஒத்திகை

டெல்லி எல்லைகளில் விவசாயிகள் டிராக்டர் பேரணி ஒத்திகை -மத்திய அரசின் பிடிவாதம் தளருமா?

Published On 2021-01-07 05:04 GMT   |   Update On 2021-01-07 05:04 GMT
டெல்லியில் குடியரசு தினத்தன்று மிகப்பெரிய டிராக்டர் பேரணி நடத்துவதற்காக, இன்று எல்லைப்பகுதிகளில் விவசாயிகள் ஒத்திகை பேரணி நடத்தினர்.
புதுடெல்லி:

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராடி வருகின்றனர். கடும் குளிர், மழைக்கு மத்தியில் விவசாயிகள் நடத்தி வரும் இந்த முற்றுகைப் போராட்டம் இன்று 43-வது நாளாக நீடிக்கிறது.  அவர்களுடன் மத்திய அரசு இதுவரை 8 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தி உள்ளது. ஆனால் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை. அடுத்ததாக நாளை (8-ந் தேதி) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 

இதற்கிடையே வேளாண் சட்டங்களை திரும்ப பெறப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதால், விவசாயிகள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர். அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால், 26-ந் தேதி குடியரசு தினத்தன்று டெல்லி ராஜபாதையில் டிராக்டர் அணிவகுப்பை பிரமாண்டமாக நடத்தப் போவதாக அறிவித்து உள்ளனர்.

இந்த போராட்டத்துக்கான ஒத்திகை நிகழ்ச்சியை இன்று காலை தொடங்கினர். டெல்லியில் உள்ள கிழக்கு மற்றும் மேற்கு எக்ஸ்பிரஸ் சாலையில் இந்த அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது. முதலில் காசிபூர் எல்லையில் டிராக்டர் பேரணியை தொடங்கினர். 

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்றைய டிராக்டர் பேரணி ஒத்திகை நடைபெறுகிறது. குடியரசு தினத்தன்று தடையை மீறி மிகப்பெரிய அளவில் பேரணி நடத்தினால், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படலாம். எனவே, நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் முக்கிய உடன்பாடு எட்டப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



டெல்லி எல்லைகளில் நடைபெறும் டிராக்டர் பேரணி ஒத்திகை காரணமாக, குண்ட்லி-மானேசர்-பல்வால் நெடுஞ்சாலை, கிழக்கு புற அதிவேக நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை-9 ஆகியவற்றில் போக்குவரத்து பாதிக்கப்படலாம். இதனால் முன்னெச்சரிக்கையாக அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டம் நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம்  செய்யப்பட்டுள்ளது. 

இன்றைய டிராக்டர் பேரணி ஒத்திகையானது, டெல்லிக்குள் நுழைய திட்டமிடப்படாததால், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்பு போலவே இருக்கும், ஆனால் புறநகரில் போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று மேற்கு சரக காவல்துறை இணை கமிஷனர் ஷாலினி சிங் தெரிவித்தார்.

அரியானா மற்றும் உத்தரபிரதேசத்துடனான டெல்லியின் எல்லைகள் இன்று தொடர்ந்து பல இடங்களில் மூடப்பட்டுள்ளன. உத்தர பிரதேசத்துடன் டெல்லியை இணைக்கும் சில்லா மற்றும் காசிப்பூர் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதன்மூலம், நொய்டா மற்றும் காசியாபாத்தில் இருந்து யாரும் டெல்லிக்கு வர முடியாது, அதே நேரத்தில் எதிர்புறம் உள்ள பாதை திறக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்திலிருந்து டெல்லிக்கு வருபவர்கள், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத ஆனந்த் விஹார், டி.என்.டி, லோனி டி.என்.டி மற்றும் அப்சரா எல்லைகள் வழியாக செல்லும் பாதைகளில் செல்லுமாறு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

டெல்லி மற்றும் அரியானா இடையே, சிங்கு, திக்ரி, ஆச்சந்தி, பியாவ் மன்யாரி, சபோலி மற்றும் மங்கேஷ் எல்லை வழியாக செல்லும் பாதைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
Tags:    

Similar News