செய்திகள்
சசிகலா

பெங்களூரு சிறையில் இருந்து 2 வாரத்தில் சசிகலா விடுதலை

Published On 2021-01-06 09:28 GMT   |   Update On 2021-01-06 09:28 GMT
வருகிற 27-ந் தேதி சசிகலா, இளவரசி, சுதாகரன் 3 பேரும் விடுதலையாக உள்ளனர். விடுதலையாகி வரும்போது சசிகலாவை சிறப்பான முறையில் வரவேற்க அ.ம.மு.க.வினர் திட்டமிட்டுள்ளனர்.
பெங்களூரு:

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேருக்கும் உச்சநீதிமன்றம் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதித்தது. 3 பேரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் சசிகலாவும், இளவரசியும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தலா ரூ.10 கோடியே 10 ஆயிரம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினர். இதையடுத்து சசிகலா தனக்கு சிறை விதிமுறையின்படி சலுகை காட்டி, முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு சிறைத்துறையில் மனு அளித்தார். அந்த மனு பரிசீலனையில் உள்ள நிலையில், சசிகலா வருகிற 27-ந் தேதி விடுதலையாக உள்ளார் என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சிறைத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சுதாகரன் பெங்களூரு நீதிமன்றத்தில், “நான் இவ்வழக்கில் 1996-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை 92 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளேன். எனவே எனக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனையில் இந்த 92 நாட்களை கழித்து, முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும்” என கோரியிருந்தார்.

இதை கடந்த 17-ந் தேதி ஏற்ற நீதிமன்றம் அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதேபோல இளவரசியும் இவ்வழக்கில் 50க்கும் மேற்பட்ட நாட்கள் சிறையில் இருந்துள்ளதால் முன்கூட்டியே வெளியே வருவார் என கூறப்பட்டது.

இந்நிலையில் சுதாகரன் தன் வழக்கறிஞர்களிடம், "நான் சசிகலா, இளவரசிக்கு முன்னதாக சிறையில் இருந்து வெளியே வரவிரும்பவில்லை. நானும் இளவரசியும் வெளியே வந்துவிட்டால் சசிகலா தனிமையில் வாட வேண்டிய நிலை ஏற்படும். 3 பேரும் ஒன்றாகவே வெளியே வருகிறோம். அதுவரை அபராதத்தை செலுத்த வேண்டாம். நான் வெளியே வருவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்" என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேபோல இளவரசியும் சசிகலாவுக்கு முன்னதாக வெளியே வருவதை விரும்பவில்லை எனத்தெரிகிறது. இதன் காரணமாக வழக்கறிஞர்கள் சுதாகரன் நீதிமன்றத்தில் அபராதத் தொகை கட்டுவதற்கான நடவடிக்கையும், இளவரசி வெளியே வருவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. சசிகலாவுக்காக தண்டனைக்காலம் முடிந்தும் சுதாகரனும், இளவரசியும் காத்திருப்பதாக அவர்களுடைய ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து வருகிற 27-ந் தேதி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்பட 3 பேரும் விடுதலையாக உள்ளனர் என்பது தெரிகிறது. 27-ந் தேதி எந்த நேரத்தில் அவர்களை விடுதலை செய்வது என்பது குறித்து போலீசார் ரகசியமாக ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. மேலும், சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும்போது அவரது பாதுகாப்பு கருதி கர்நாடக மாநில எல்லைக்குள் தமிழகத்தில் இருந்து அவரது ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கப்படாது என்பதும் தெரியவந்துள்ளது.

சிறையில் இருந்து வெளியே வரும் 3 பேரையும் கர்நாடக-தமிழக எல்லை பகுதியான ஓசூர் அத்திபள்ளி வரை பாதுகாப்பாக கொண்டு செல்ல கர்நாடக அரசு மற்றும் போலீசார் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

சசிகலா விடுதலையாவதையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கார் அணிவகுத்து சென்று ஏராளமானோர் வரவேற்க திட்டமிட்டுள்ளனர். எனவே, அந்த பகுதியில் கர்நாடகம் மற்றும் தமிழகம் ஆகிய இருமாநில போலீசார்களும் பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

விடுதலையாகி வரும் சசிகலாவை வரவேற்பது தொடர்பாக சேலம் மாநகர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் எஸ்.சி.வெங்கடாசலம் கூறியதாவது:-

சசிகலா வருகிற 27-ந் தேதி விடுதலையாகிறார். அவரது விடுதலை நாளை நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

அவர் விடுதலையாகி வரும்போது சசிகலாவை சிறப்பான முறையில் வரவேற்க நூற்றுக்கும் மேற்பட்ட கார்களில் அணிவகுத்து செல்ல திட்டமிட்டுள்ளோம்.

அவரை வரவேற்க சேலம் மாவட்டத்தில் இருந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை இருக்கும் பகுதிக்கு செல்ல தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News