செய்திகள்
அமலாக்கத்துறை அலுவலகத்தில் சஞ்சய் ராவத் எம்.பி.யின் மனைவி வர்ஷா ராவத் ஆஜராக வந்த போது எடுத்த படம்.

சஞ்சய் ராவத் மனைவியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

Published On 2021-01-05 01:57 GMT   |   Update On 2021-01-05 01:57 GMT
பி.எம்.சி. வங்கி மோசடி வழக்கில் சஞ்சய் ராவத் மனைவி அமலாக்கத்துறை முன் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மும்பை :

பி.எம்.சி. வங்கி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வங்கியில் இருந்து ரூ.95 கோடி கடன் பெற்றதாக குருசிஸ் கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக பிரவின் ராவத் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவரின் வங்கி கணக்கில் இருந்து அவரது மனைவி மாதுரிக்கு ரூ.1 கோடியே 60 லட்சம் அனுப்பியதும், மேலும் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்துக்கு வட்டி இல்லா கடனாக ரூ.55 லட்சம் மாற்றப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இருப்பினும் உடல்நிலை காரணமாக அவர் ஆஜராவதை தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணி அளவில் மும்பை பல்லார்டு பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வர்ஷா ராவத் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனா். நீண்ட நேர விசாரணைக்கு பிறகு வர்ஷா ராவத் விடுவிக்கப்பட்டார்.

ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை போன்ற அமைப்புகளை பயன்படுத்தி கட்சியினரின் குடும்ப உறுப்பினர்களை மிரட்டுவதாக குற்றம் சாட்டி உள்ளார்.

பா.ஜனதாவில் இருந்து விலகிய மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே கடந்த மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் நிலமோசடி தொடர்பாக விசாரணை நடத்த அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் கொரோனா அறிகுறி காரணமாக இன்னும் ஆஜராகவில்லை.
Tags:    

Similar News