செய்திகள்
கோப்புப்படம்

கேரளாவில் பரவும் பறவைக் காய்ச்சல்

Published On 2021-01-04 19:41 GMT   |   Update On 2021-01-04 19:41 GMT
கேரள மாநிலத்தின் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களின் சில பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது.
கோட்டயம்:

கோட்டயத்தில் நீண்டூர் என்ற இடத்தில் ஒரு வாத்துப் பண்ணையில் நோய் பரவியிருப்பதாக அதிகாரிகள் கண்டறிந்தனர். அங்கு 1500 வாத்துகள் இறந்துள்ளன. இதேபோல ஆலப்புழா மாவட்டத்தின் குட்டநாடு மண்டலத்தில் உள்ள சில பண்ணைகளிலும் பறவைக் காய்ச்சல் தாக்கி உள்ளது.

போபாலில் செயல்படும் பறவை நோய்கள் ஆராய்ச்சி மையத்திற்கு மாதிரிகள் அனுப்பி, பறவைக் காய்ச்சலின் பரவல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ராஜூ கூறும்போது, “நோய் அறியப்பட்ட பகுதியில் பறவைப் பண்ணை வைத்திருப்பவர்கள், வளர்ப்பு பறவைகளை அழித்து நோய்ப்பரவலை தடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். அழிக்கும் பறவைகளுக்கான இழப்பீட்டை அரசு வழங்கும்” என்று அறிவித்துள்ளார்.

வளர்ப்பு பறவைகளான கோழிகள், வான்கோழிகள், வாத்துகள் உள்ளிட்டவற்றின் கழிவுகள், மூக்கு, வாய், கண் இவற்றின் வழியாக பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் எச்.5என்8 வைரஸ் பரவுவதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு, கேரளாவில் கடந்த 2016-ம் ஆண்டு பறவைக் காய்ச்சல் பரவியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News