செய்திகள்
ஜியோ

கேரளாவில் ஜியோ இண்டர்நெட் சேவைகள் நிறுத்தப்பட்டதாக கூறி வைரலாகும் தகவல்

Published On 2021-01-04 05:17 GMT   |   Update On 2021-01-04 05:17 GMT
கேரள மாநிலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.


டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 40-வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், 2021 முதல் கேரள மாநிலத்தில் ரிலையன்ஸ் ஜியோ சேவைகளை நிறுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது. மேலும் அரசின் நெட்வொர்க் மற்றும் மொபைல் போன்களை ஜியோவை விட மிகக்குறைந்த கட்டணத்தில் வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

வைரல் பதிவுகளில், `மோடி மற்றும் அம்பானிக்கு கடும் பதிலடி கொடுக்கும் அதிரடி நடவடிக்கைகை கேரள அரசு கொடுத்துள்ளது. புத்தாண்டு முதல் ஜியோ இணைய சேவைகள் கேரளாவில் நிறுத்தப்படுகிறது. அரசின் சொந்த நெட்வொர்க், கேரள பைபர் நெட் மற்றும் போன் ஜியோவை விட பாதி கட்டணத்தில் வழங்கப்படுகிறது.' என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.



வைரல் தகவல்களை ஆய்வு செய்ததில், கேரள அரசு ஜியோ சேவைகளுக்கு தடை விதிக்கவில்லை என்பதும், அம்மாநில அரசு புதிய இணைய சேவையை துவங்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. உண்மையில் இதுபோன்ற அறிவிப்பு வெளியானால் அது பெருமளவில் செய்திகளாகி இருக்கும்.

எனினும், இதுபோன்ற தகவல் அடங்கிய செய்தி ஒன்றும் வெளியாகவில்லை. கேரளாவின் சொந்த இணைய சேவை பற்றிய இணைய தேடலில், அம்மாநில அரசு கேரளா ஆப்டிக் பைபர் நெட்வொர்க் மூலம் இலவச இணைய வசதியை வழங்க இருப்பது பற்றிய செய்தி தொகுப்பு காணக்கிடைத்தது.

மேலும் கேரளா அரசு சொந்தமாக நெட்வொர்க் சேவையை துவங்குவது பற்றி எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. அந்த வகையில் வைரல் தகவல்களில் உள்ள விவரங்களில் துளியும் உண்மையில்லை என்பது உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News