செய்திகள்
அனில் தேஷ்முக்

கொரோனா தடுப்பு மருந்து கள்ளச்சந்தையில் விற்பதை தடுக்க நடவடிக்கை: அனில் தேஷ்முக்

Published On 2021-01-04 02:38 GMT   |   Update On 2021-01-04 02:38 GMT
கொரோனா தடுப்பு மருந்து கள்ளச்சந்தையில் விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மந்திரி அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.
மும்பை :

சீனாவில் இருந்து பரவிய கொரோனா என்னும் உயிர்கொல்லி வைரஸ் உலகம் முழுவதையும் முடக்கிப்போட்டது.

இந்தியாவையும் கடுமையாக பாதித்த இந்த வைரசின் தாக்கம் சற்று நாட்களாக குறைந்து வருகிறது. குறிப்பாக நாட்டிலேயே அதிகம் பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மராட்டியத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் அந்த நோயை அடியோடு ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் இறங்கியுள்ளன.

இந்த வைரசுக்கு முடிவு கட்டுவதற்காக தடுப்பூசி போடும் பணிக்கு இந்தியா தயாராகி வருகிறது.

இந்த பிரமாண்ட பணியை எந்த பிரச்சினையும் இன்றி நேர்த்தியாக செய்து முடிப்பதற்காக நேற்று முன்தினம் நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

மராட்டியத்தில் மும்பை தவிர புனே, நாக்பூர், ஜல்னா, நந்தூர்பர் ஆகிய 4 மாவட்டங்களில் தடுப்பூசி ஒத்திகை நடந்தது.

ஜல்னாவில் மாநில சுகாதார மந்திரி ராஜேஷ் தோபே தடுப்பூசி ஒத்திகை பணியை நேரில் பார்வையிட்டார்.

தடுப்பூசி போடும் பணியின்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளும், பிற அம்சங்களும் அடையாளம் காணப்பட்டன. இந்த ஒத்திகை மராட்டியத்தில் வெற்றிகரமாக நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் புனேயில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிசீல்டு மற்றும் பாரத் பையோடெக் நிறுவனம் ஆகியவை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரித்த கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கிடையே மாநில மந்திரி அனில் தேஷ்முக் கூறியதாவது:-

கொரோனாவுக்கு எதிராக முன்களத்தில் நின்று போராடிவரும் மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும், இவர்களுடன் சேர்ந்து போலீசாருக்கும் தடுப்பூசி போடும் பணியில் முன்னுரிமை அளிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அதன்பிறகு 2-வதாக 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் தடுப்பூசி போடப்படும். கொரோனாவுக்கு போடப்படும் தடுப்பூசிகள் கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதை தடுக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News