செய்திகள்
கோப்புப்படம்

விவசாயிகள் போராட்டத்தை சத்தியாகிரகத்துடன் ஒப்பிட்ட ராகுல்

Published On 2021-01-04 00:40 GMT   |   Update On 2021-01-04 00:40 GMT
விவசாயிகள் போராட்டத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சத்தியாகிரக போராட்டத்துடன் ஒப்பிட்டார்.
புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் தங்கள் நலன்களுக்கு எதிரானவை என கூறி, அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்துகிற போராட்டம் 2-வது மாதமாக தொடர்கிறது.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் மத்திய அரசு முழு முனைப்புடன் செயல்படுகிறது. ஏற்கனவே, போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு 6 சுற்று பேச்சு வார்த்தை நடத்தி உள்ளது. விவசாயிகளுடனான பேச்சு வார்த்தையை மத்திய அரசு இன்று (4-ந் தேதி) மீண்டும் தொடர்கிறது.

இந்த தருணத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, விவசாயிகள் நடத்தி வருகிற போராட்டத்தை சத்தியாகிரக போராட்டத்துடன் ஒப்பிட்டு டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நாடு சம்பரன் (சத்தியாகிரகம்) போன்ற சோகத்தை எதிர்கொள்ளப்போகிறது. ஆங்கிலேய அரசு அப்போது பண்ணையார்களின் ஆதரவாளர்களாக இருந்தது. இப்போது மோடியின் நண்பர்கள், அந்த பண்ணையார்களாக உள்ளனர்.

ஆனால் ஒவ்வொரு விவசாயியும், தொழிலாளியும் ஒரு சத்தியாகிரக போராளிதான். அவர்கள் தங்கள் உரிமைகளை திரும்பப்பெறுவார்கள்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறி உள்ளார்.

சத்தியாகிரக போராட்டம் என்பது இந்திய விடுதலை போராட்டத்தின் ஒரு அங்கமாக 1917-ல் மகாத்மா காந்தியால் வழிநடத்தப்பட்டதாகும். இது இந்திய விடுதலை போராட்டத்தின் முக்கியமான வரலாற்று நிகழ்வு ஆகும். பீகார் மாநிலத்தில் சம்பரன் மாவட்டத்தில் விவசாயிகள் உணவு பயிர்களை பயிரிட அனுமதி இல்லை. பண பயிரான அவுரி பயிரிட வைக்கப்பட்டனர். அந்த பயிர்களை ஆங்கிலேய அரசு ஆதரவு பெற்ற பண்ணையாளர்களுக்கு குறைந்த விலையில் விற்க கட்டாயப்படுத்தப்பட்டனர். அதை எதிர்த்து மகாத்மா காந்தி போராட்டம் நடத்தினார். வரிகொடா இயக்கம் நடத்தினார். அதன்பலனாக அவுரி பயிருக்கு அதிக விலை தர பண்ணையாளர்கள் ஒப்புக்கொண்டனர். இந்த போராட்டத்தின்போதுதான் மகாத்மா காந்தி முதன்முதலாக பாபு (தந்தை) என அழைக்கப்பட்டார்.
Tags:    

Similar News