செய்திகள்
வினீத்

கோட்டயத்தில் பரிதாபம் : ஆன்லைனில் ரம்மி விளையாடி ரூ.60 லட்சம் இழந்த வாலிபர் தற்கொலை

Published On 2021-01-03 20:39 GMT   |   Update On 2021-01-03 20:39 GMT
கோட்டயத்தில் ஆன்லைனில் ரம்மி விளையாடி ரூ.60 லட்சம் இழந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
பாலக்காடு:

கோட்டயம் மாவட்டம் குத்திசால் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் பிள்ளை. இவருடைய மகன் வினீத் (வயது 28). இவர் துபாயில் வேலை செய்துவிட்டு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பினார். பின்னர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

இவருக்கு குறுகிய நாட்களில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. எனவே ஆன்லைனில் ரம்மி விளையாட முடிவு செய்தார். அதன்படி கடந்த 6 மாதங்களாக அவர் ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடி வந்தார்.

முதலில் அவருக்கு லாபம் கிடைத்தது. இதனால் ஆவலுடன் மீண்டும் விளையாடினார். முதலில் அவருக்கு சிறிய அளவிலான பணம் நஷ்டம் ஏற்பட்டது. பின்னர் அந்த பணம் திரும்ப கிடைத்தது. தொடர்ந்து விளையாடியதால் நஷ்டம் ஏற்பட்டது.

இவ்வாறு கடந்த 6 மாதத்தில் ரூ.35 லட்சத்தை இழந்தார். அதை திரும்ப பெற்றுவிட வேண்டும் என்று நண்பர்களிடம் கடன் வாங்கி விளையாடினார். அந்த வகையில் ரூ.25 லட்சம் கடன் ஏற்பட்டது. ஆனால் அவரால் வெற்றிபெற வில்லை என்பதால் அந்த பணத்தை எடுக்க முடியவில்லை.

மேலும் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டனர். இதனால் செய்வது அறியாமல் திகைத்த அவர் மனஉளைச்சல் அடைந்தார். அத்துடன் பணம் கொடுத்தவர்கள் இது குறித்து போலீசிலும் புகார் செய்தனர்.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த வினீத், தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் இருக்கும் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கோட்டயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News