செய்திகள்
காட்டுத் தீ

மணிப்பூரில் பரவும் காட்டுத் தீ -தேவையான உதவிகளை செய்வதாக உள்துறை மந்திரி உறுதி

Published On 2021-01-02 06:03 GMT   |   Update On 2021-01-02 06:03 GMT
மணிப்பூரில் பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உள்துறை மந்திரி கூறி உள்ளார்.
இம்பால்:

மணிப்பூர்-நாகலாந்து எல்லையில் உள்ள சூக்கோ பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை காட்டுத் தீ ஏற்பட்டது. எல்லையில் நாகலாந்து பகுதியில் பற்றிய தீ மணிப்பூரின் சேனாபதி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிக்கு பரவத் தொடங்கியது. வேகமாக தீ பரவிய நிலையில், பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் உள்ள மரங்கள், செடிகொடிகள் கருகி உள்ளன. 

தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணிக்காக விமானப்படை ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மாநில அரசின் கோரிக்கையை ஏற்று, தேசிய பேரிடர் மீட்பு படையின் 7 குழுக்கள் சூக்கோ பள்ளத்தாக்கிற்கு விரைந்துள்ளன. 

சூக்கோ பள்ளத்தாக்கில் காட்டுத் தீ மற்றும் தற்போதைய நிலவரம் தொடர்பாக முதல்வர் பிரேன் சிங்கிடம், உள்துறை மந்திரி அமித் ஷா கேட்டறிந்தார். காட்டுத் தீயை அணைக்கும் பணிக்கு தேவையான உதவிகளை உள்துறை அமைச்சகம் செய்யும் என அமித் ஷா உறுதி அளித்துள்ளார். 

காட்டுத் தீயால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் பிரேன் சிங், ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். மாநில தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் சேனாபதி மாவட்ட துணை ஆணையர் ஆகியோரும் உடன் சென்றனர்.
Tags:    

Similar News