செய்திகள்
சிவசேனா

அமலாக்கத்துறையை பயன்படுத்தி மராட்டிய அரசை கவிழ்க்க முடியாது - பா.ஜனதாவுக்கு சிவசேனா கண்டனம்

Published On 2020-12-30 22:46 GMT   |   Update On 2020-12-30 22:46 GMT
அமலாக்கத்துறையை பயன்படுத்தி மராட்டிய அரசை கவிழ்க்க முடியாது என்று பா.ஜனதாவுக்கு சிவசேனா கண்டனம் தெரிவித்து உள்ளது.
மும்பை:

சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்தை, பி.எம்.சி. வங்கி மோசடி விவகாரத்தில் விசாரிக்க அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியது.

ஆனால், 3 முறை சம்மன் அனுப்பியும் வர்ஷா ராவத் ஆஜராகவில்லை.

இதற்கிடையே அரசியலில் எதிர்ப்பவர்கள் பணிய மறுத்தால், அவர்களை அமலாக்கப் பிரிவு மூலம் மத்திய அரசு மிரட்டுகிறது என்று சிவசேனா சாடியிருந்தது.

இதற்கு பதில் அளித்து பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறுகையில், “அமலாக்கத்துறை அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பு, அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டது” என தெரிவித்ததுடன் அரசியலமைப்பு சட்டத்தின் மீது சஞ்சய் ராவத்துக்கு நம்பிக்கை இல்லையா என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில் நேற்று பா.ஜனதாவுக்கு கண்டனம் தெரிவித்து கூறப்பட்டு இருப்பதாவது:-

அரசியலமைப்பு சட்டத்தின் மீது சஞ்சய் ராவத்துக்கு நம்பிக்கையில்லையா என்று சந்திரகாந்த் பாட்டீல் கேட்டார். ஆனால் அவருக்கு அரசியலமைப்பு சட்டத்தின் மீது திடீர் அக்கறையும், கவலையும் எப்போதிலிருந்து வந்தது.

அரசியலமைப்பு சட்டம் குறித்த இந்த கேள்விகளை முதலில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியிடம் சென்று கேளுங்கள். கவர்னர் நியமனத்தில் நிரப்பப்படும் 12 மேல்-சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. புதிய மேல்-சபை உறுப்பினர்களுக்கான பரிந்துரையை மந்திரி சபை கடந்த ஜூன் மாதமே வழங்கிவிட்டது. ஆனால் இன்னும் காலி இடங்களை நிரப்பாமல் கிடப்பில் போட்டுள்ளார்.

2020-ம் ஆண்டில் உத்தவ் தாக்கரே அரசை கவிழ்க்க எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. எனவே மராட்டியத்தில் கவர்னர் ஆசைப்படும் அரசு அமைய அடுத்த 25 ஆண்டுகளுக்கு வாய்ப்பில்லை.

மகா விகாஸ் அகாடி அரசை அமலாக்க பிரிவு மூலம் மிரட்டி கலைத்துவிட முடியும் என்ற மூடநம்பிக்கையில் இருந்து முதலில் பா.ஜனதா வெளிவர வேண்டும்.

பா.ஜனதாவில் இருந்து வெளியேறிய ஏக்நாத் கட்சேவுக்கு அமலாக்கத்துறை நில மோசடி தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியது. அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு பிறகு தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே, சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக் அல்லது மகா விகாஸ் அகாடி எம்.எல்.ஏ.க்கள் என யாருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தாலும் விளைவுகள் விபரீதமாக இருக்கும். அமலாக்கத்துறையின் நோக்கம் தூய்மையாக இருக்கும் பட்சத்தில் அதற்கு கட்டுப்படுவோம். மற்றபடி சட்டவிரோத உத்தரவுகளுக்கு அடிபணிந்து செல்ல வேண்டியதில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News