செய்திகள்
சரத்பவார்

விவசாயிகள் பிரச்சினை: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் இன்று முடிவு - சரத்பவார் தகவல்

Published On 2020-12-29 22:32 GMT   |   Update On 2020-12-29 22:32 GMT
பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் இன்று முடிவு செய்வோம் என முன்னாள் வேளாண் மந்திரி சரத்பவார் கூறினார்.
புதுடெல்லி:

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு இன்று (புதன்கிழமை) பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்த போராட்டம் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் வேளாண் மந்திரியுமானசரத்பவார் நேற்று பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி குற்றம் சாட்டுவது அழகல்ல. விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்தும் அடுத்த சுற்று (இன்று நடக்கிறது) பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் இன்று முடிவு செய்வோம்’ என்று கூறினார்.

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழு குறித்து கேள்வி எழுப்பிய சரத்பவார், விவசாயம் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து ஆழ்ந்த புரிதல் கொண்ட தலைவர்களை இந்த பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஈடுபடுத்தி இருக்க வேண்டும் எனவும் கூறினார்.

தான் வேளாண் மந்திரியாக இருந்தபோது அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்குடன் இணைந்து வேளாண் துறையை சீர்திருத்த நடவடிக்கை எடுத்ததாக கூறிய சரத்பவார், ஆனால் பா.ஜனதா எடுத்திருக்கும் இதுபோன்ற வழியில் அதை செயல்படுத்த முனையவில்லை எனவும், இது குறித்து மாநிலங்களுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவித்தார்.

ஆனால் தற்போதைய அரசு மாநிலங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என குற்றம் சாட்டிய அவர், டெல்லியில் அமர்ந்துகொண்டு விவசாயம் செய்ய முடியாது எனவும், அது தொலைதூர கிராமங்களில் உழைக்கும் விவசாயிகளை உள்ளடக்கியது என்றும் தெரிவித்தார்.
Tags:    

Similar News