செய்திகள்
தவார்சந்த் கெலாட்

5 ஆண்டுகளில் 4 கோடி தலித் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை - மத்திய மந்திரி தகவல்

Published On 2020-12-29 19:39 GMT   |   Update On 2020-12-29 19:39 GMT
அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி தலித் மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்க மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக, மந்திரி தவார்சந்த் கெலாட் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

தலித் மாணவர்கள் 10-ம் வகுப்புக்கு பிறகு கல்வியை தொடர்வதை ஊக்கப்படுத்துவதற்காக பள்ளிக்கு பிறகான (போஸ்ட் மெட்ரிக்) கல்வி உதவித்தொகை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ், தலித் மாணவர்கள் 10-ம் வகுப்புக்கு பிறகு கல்வியை தொடரும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.59,000 கோடியை கல்வி உதவித் தொகையாக வழங்க மத்திய மந்திரிசபை அண்மையில் ஒப்புதல் வழங்கியது.

இதில் ரூ.35,534 கோடி (60%) மத்திய அரசு நிதியில் இருந்தும் மீதமுள்ள தொகை மாநில அரசு நிதியிலிருந்தும் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி தலித் மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்க மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி தவார்சந்த் கெலாட் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “முந்தைய காலங்களில் இருந்த திட்டத்தைப் பின்பற்றி கடந்த 2 வருடங்களாக ஆண்டுக்கு ரூ.1,100 கோடி மட்டுமே போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைக்குச் செலவிடப்பட்டது. இதனால் மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டது. சரியான நேரத்துக்கு மாநிலங்களால் உதவித்தொகையை அளிக்க முடியவில்லை. இதனால் தலித் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்தது.

ஆனால் மோடி அரசு இதைத் தற்போது மாற்றியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் உதவித்தொகை, மாணவர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக அனுப்பப்படும்.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு. இதனால் கல்வித்தரம் உயரும். இந்த முடிவுக்கு எந்த மாநிலமும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகைத் திட்டத்தின் மூலம் 2014- 15-ம் ஆண்டில் 17 சதவீத மாணவர்கள் பயன்பெற்ற நிலையில், தற்போது 23 சதவீத மாணவர்கள் பலனடைந்து வருகின்றனர். இதை 27 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது” என்றார்.
Tags:    

Similar News