செய்திகள்
கேரளா கவர்னர் ஆரிப் முகமது கான்

வேளாண் சட்டங்கள் பற்றி விவாதிக்க சட்டசபையை கூட்ட கேரள கவர்னர் ஒப்புதல்

Published On 2020-12-28 20:52 GMT   |   Update On 2020-12-28 20:52 GMT
கேரள அரசிடம் சில விளக்கங்களைப் பெற்ற பின்பு டிசம்பர் 31–ம் தேதி சட்டசபை கூட்டம் நடத்த கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது.
திருவனந்தபுரம்:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

இந்த சட்டங்களுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவும், விவாதிக்கவும் சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு கோரிக்கை விடுத்தார்.

அதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஒருநாள் கூட்டத்திற்கு அனுமதிக்க கோரி கடந்த 24–ம் தேதி மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கும் கவர்னர் பதில் அளிக்காத நிலையில் 2 அமைச்சர்கள் கவர்னரை நேரில் சந்தித்து பேசினர். கவர்னரின் மவுனத்திற்கு எதிராக விமர்சனங்கள் எழ ஆரம்பித்தது.

இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், கவர்னரை சந்தித்து ஜனவரி 8–ல் தொடங்க உள்ள வழக்கமான சட்டசபை கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துப் பேசினார். அப்போது ஒருநாள் சட்டசபை கூட்டத்திற்கு அனுமதி கொடுப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வேளாண் சட்டங்கள் பற்றி விவாதிக்க ஒருநாள் சட்டசபையை கூட்ட கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார் என கவர்னர் அலுவலகம் அறிவித்துள்ளது. மாநில அரசிடம் சில விளக்கங்களைப் பெற்ற பின்பு டிசம்பர் 31–ம் தேதி கேரள சட்டசபை கூட்டம் நடத்த கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது.
Tags:    

Similar News