செய்திகள்
பிரதமர் மோடி மன் கி பாத் உரை

புதிய வாய்ப்புகளை அளித்த 2020... மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு

Published On 2020-12-27 06:10 GMT   |   Update On 2020-12-27 06:10 GMT
இந்த ஆண்டின் இறுதி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நம் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலக அளவில் சென்றடையவேண்டும் என வலியுறுத்தினார்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன், மக்களுடன் கலந்துரையாடுகிறார். அவ்வகையில் இந்த ஆண்டின் இறுதி ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:-

2020ம் ஆண்டில் ஏற்பட்ட ஒவ்வொரு இடர்களும் நமக்கு புதிய வாய்ப்புகளையும், பாதையையும் காட்டி உள்ளது. கொரோனா காரணமாக, விநியோகச் சங்கிலிகள் உலகம் முழுவதும் சீர்குலைந்தன. ஆனால் ஒவ்வொரு நெருக்கடியிலிருந்தும் புதிய படிப்பினைகளை நாம் கற்றுக்கொண்டோம். தேசமும் புதிய திறன்களை வளர்த்தது. இந்த திறனை நாம் சுயசார்பு பாரதம் அல்லது தன்னிறைவு இந்தியா என்று அழைக்கலாம்.

நம் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலக அளவில் சென்றடையவேண்டும். உள்ளூர் தயாரிக்கும் பொருட்களின் தரத்தில் எந்த சமரசமும் செய்யக்கூடாது. நம் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க உறுதி ஏற்போம்.

வாடிக்கையாளர்களும் இப்போது 'மேட் இன் இந்தியா' பொம்மைகளை கேட்கின்றனர். சிந்தனை செயல்பாட்டில் இது ஒரு பெரிய மாற்றமாகும். மேலும் இது மக்களின் அணுகுமுறையில் ஒரு பெரிய மாற்றத்திற்கான ஒரு உதாரணம். அதுவும் ஒரு வருட காலத்திற்குள் இது நிகழ்ந்துள்ளது. இந்த மாற்றத்தை அளவிடுவது எளிதல்ல.

மக்கள் முடிவு செய்து முன்னேறும்போதும், உள்ளூர் தயாரிப்புகளுக்கான குரல் ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கும் போதும் நமது தயாரிப்புகள் உலகத் தரம் வாய்ந்தவை என்பதை, நமது உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் உறுதிப்படுத்த வேண்டிய நேரம் இது. 

இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமர் மோடி உரையாற்றும் 72வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News