செய்திகள்
மந்திரி சுதாகர்

இரவு நேர ஊரடங்கு அரசியல் முடிவு அல்ல: மந்திரி சுதாகர்

Published On 2020-12-26 02:53 GMT   |   Update On 2020-12-26 02:53 GMT
இரவு நேர ஊரடங்க முடிவும், நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து மக்களின் நலனை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்டது என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
பெங்களுரூ :

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கு குறித்து ஆழ்ந்து ஆலோசித்த பிறகே அரசு முடிவு எடுத்தது. இது அரசியல் நோக்கத்தில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. இந்த விஷயத்தில் எங்கள் அரசு மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இந்த அரசு தான் கொரோனாவை கட்டுப்படுத்தியது. மாநில அரசின் தீவிரமான நடவடிக்கைகளால் கொரோனா நோயாளிகளில் 97.5 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர்.

மரண விகிதமும் 1.22 சதவீதமாக குறைந்துள்ளது. புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதால் இங்கிலாந்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அங்கு ஆட்சியை நடத்துகிறவர்களுக்கு அறிவு இல்லை என்று அர்த்தம் இல்லை. சுகாதாரத்துறையில் அதிக அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகளை பெற்ற அரசு ஒவ்வொரு முடிவையும் எடுக்கிறது.

இரவு நேர ஊரடங்க முடிவும், நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து மக்களின் நலனை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்டது. ஊரடங்கை அமல்படுத்தினால் அரசுக்கு பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்படுகிறது. ஆயினும் மக்களின் நலன் கருதி சில முடிவுகளை அரசு எடுக்கிறது. நெருக்கடியான நேரத்தில் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி கூறுவது அரசின் கடமை. இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அது புதிய வகை வைரசா என்பதை கண்டறிய அதன் மாதிரிகள் நிமான்ஸ் சோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மரபணு மாற்றத்தை கண்டறிய 2, 3 நாட்கள் தேவைப்படுகிறது. ஒருவேளை புதிய வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியானால், அதை பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்துவிட்டு ஜாமீனில் வந்தவர்கள் (டி.கே.சிவக்குமார்) என்னை பற்றி குறை சொல்கிறார்கள். அத்தகையவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜாமீனில் வெளியே இருப்பவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.
Tags:    

Similar News