செய்திகள்
கோப்புப்படம்

வேளாண் மசோதா விவகாரம் : கெஜ்ரிவாலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்மாநிலங்களவை தலைவரிடம் பெண் எம்.பி. தாக்கல்

Published On 2020-12-25 00:48 GMT   |   Update On 2020-12-25 00:48 GMT
மாநிலங்களவையை அவமதித்து விட்டதாக கூறி சோனல் மான்சிங் என்ற பெண் எம்.பி., கெஜ்ரிவாலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார்
புதுடெல்லி:

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம்தொடர்பாக விவாதிக்க டெல்லி சட்டசபையின் சிறப்பு கூட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் பேசிய முதல்-மந்திரி கெஜ்ரிவால் வேளாண் சட்ட நகல்களை கிழித்தெறிந்ததுடன், இந்த சட்டங்கள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அடுக்கினார். குறிப்பாக மாநிலங்களவையில் விவாதம் மற்றும் ஓட்டெடுப்பு இன்றி இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.

இதன்மூலம் அவர் மாநிலங்களவையை அவமதித்து விட்டதாக கூறி சோனல் மான்சிங் என்ற பெண் எம்.பி., கெஜ்ரிவாலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார். மாநிலங்களவை நியமன எம்.பி.யும், பா.ஜனதா ஆதரவாளருமான சோனல் மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவிடம் இந்த நோட்டீசை தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘வேளாண் சட்டங்கள் மாநிலங்களவையில் முதல் முறையாக ஓட்டெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டதாக கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். இது தீவிர உரிமை மீறல் மட்டுமின்றி, அவை மாண்பையும், அவைத்தலைவரை அவமதிக்கும் செயலும் ஆகும். உண்மையில் இந்த சட்டங்கள் மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இந்த சட்ட நகல்களை கிழித்தெறிந்திருப்பது மாநிலங்களவையை அவமதித்திருப்பதுடன், தகுந்த விதிமுறைப்படி தண்டிக்கப்பட வேண்டியதும் ஆகும்’ என குறிப்பிட்டு உள்ளார்.
Tags:    

Similar News