செய்திகள்
பரூக் அப்துல்லா

கா‌‌ஷ்மீரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளபி.டி.பி. கட்சித் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் - பரூக் அப்துல்லா

Published On 2020-12-25 00:13 GMT   |   Update On 2020-12-25 00:13 GMT
கா‌‌ஷ்மீரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பி.டி.பி. கட்சித் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
ஸ்ரீநகர்:

கா‌‌ஷ்மீரின் 20 மாவட்டங்களில் உள்ள 280 இடங்களுக்கு கடந்த மாதம் 28 முதல் கடந்த 19 வரை 8 கட்டங்களாக கா‌‌ஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் (டிடிசி) தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்றுமுன்தினம் வெளியாகின. இதில் ஜம்முகா‌‌ஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்பதற்காக அமைக்கப்பட்ட குப்கர் கூட்டமைப்பு 110 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.க. 75 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இதனிடையே தேர்தல் வாக்குகளை எண்ணும் பணி தொடங்குவதற்கு முன்பாக கடந்த செவ்வாய்க்கிழமை முன்னாள் மந்திரி நயீம் அக்தர் உள்பட மக்கள் ஜனநாயகக் கட்சியைச் (பி.டி.பி) சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தலைவர்களை போலீசார் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர்.

இந்தநிலையில் நேற்று ஸ்ரீநகரில் குப்கர் கூட்டமைப்பின் தலைவர் பரூக் அப்துல்லா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கைது செய்யப்பட்டுள்ள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில் ‘‘மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர்கள் எந்த ஒரு காரணமும் இன்றி கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளனர். ஜனநாயகம் வாழ்வதை நீங்கள் விரும்பினால் உடனடியாக அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்’’ எனக் கூறினார்.
Tags:    

Similar News