செய்திகள்
வாக்காளர்கள்

ஜம்மு காஷ்மீர் தேர்தலில் குப்கர் கூட்டணி 110 இடங்களில் வெற்றி- தனிப்பெரும் கட்சி பாஜக

Published On 2020-12-23 09:46 GMT   |   Update On 2020-12-23 09:46 GMT
ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தலில் குப்கர் கூட்டணி அதிக இடங்களில் கைப்பற்றி உள்ளது.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்றது. மொத்தமுள்ள 280 மாவட்டக் கவுன்சில் தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்தலில் மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லாவின் அரசியல் கட்சிகளான மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட 7 பிராந்திய கட்சிகள் இணைந்து அமைத்துள்ள குப்கர் கூட்டணி, காங்கிரஸ், பாஜக மற்றும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி, சுயேட்சைகள் என மொத்தம் 2 ஆயிரத்து 181 பேர் போட்டியிட்டனர். 

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது. இரவு நிலவரப்படி, ஜம்மு டிவிசனில் பா.ஜனதா அதிக இடங்களிலும், காஷ்மீரில் குப்கர் கூட்டணி அதிக இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. ஸ்ரீநகரில் உள்ள 14 இடங்களில் ஏழு இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.

இன்று மதியம் வெளியிட்ட தகவலின்படி, 110 இடங்களை குப்கர் கூட்டணி கைப்பற்றியிருந்தது. பாஜக 75 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் 26 இடங்களை கைப்பற்றியது. மாவட்டங்களைப் பொருத்தவரை குப்கர் கூட்டணி 13 மாவட்டங்களிலும், பாஜக 6 மாவட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
Tags:    

Similar News