செய்திகள்
மந்திரி சுதாகர்

கர்நாடகத்தில் அரசு டாக்டர்களுக்கு சிறப்பு படி உயர்வு: மந்திரி சுதாகர்

Published On 2020-12-23 02:14 GMT   |   Update On 2020-12-23 02:14 GMT
கர்நாடகத்தில் அரசு டாக்டர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு படி உயர்த்தப்பட்டு உள்ளதாகவும், இது கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாகவும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
பெங்களூரு :

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த நெருக்கடியான தருணத்தில் டாக்டர்கள் சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையிலும், வரும் காலத்தில் இளம் டாக்டர்கள் கிராமப்புறங்களில் பணியாற்றுவதை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் அரசு டாக்டர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு படி உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

இதற்கு முன்பு கடந்த 2015-ம் ஆண்டு இந்த சிறப்பு படி உயர்த்தப்பட்டது. 6 மாதங்கள் அனுபவம் உள்ள எம்.பி.பி.எஸ். டாக்டர்கள், பல் டாக்டர்களுக்கு தற்போது வழங்கப்படும் படி ரூ.21 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரத்து 500 ஆகவும், மருத்துவ முதுநிலை படிப்பை முடித்துள்ள டாக்டர்களுக்கு ரூ.42 ஆயிரத்து 600-ல் இருந்து ரூ.55 ஆயிரத்து 500 ஆகவும், மருத்துவ நிபுணர்களுக்கு ரூ.50 ஆயிரத்து 800-ல் இருந்து ரூ.64 ஆயிரத்து 500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

20 ஆண்டுகள் அனுபவம் உள்ள எம்.பி.பி.எஸ். டாக்டர்களுக்கு ரூ.23 ஆயிரத்தில் இருந்து ரூ.44 ஆயிரத்து 500 ஆகவும், முதுநிலை படிப்பை முடித்த டாக்டர்களுக்கு ரூ.44 ஆயிரத்து 800-ல் இருந்து ரூ.73 ஆயிரத்து 500 ஆகவும், மருத்துவ நிபுணர்களுக்கு ரூ.58 ஆயிரத்து 400-ல் இருந்து ரூ.93 ஆயிரத்து 500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

25 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ள எம்.பி.பி.எஸ். முடித்த டாக்டர்களுக்கு ரூ.23 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரத்து 500 ஆகவும், முதுநிலை படிப்பை முடித்த டாக்டர்களுக்கு ரூ.44 ஆயிரத்து 800-ல் இருந்து ரூ.93 ஆயிரத்து 500 ஆகவும், மருத்துவ நிபுணர்களுக்கு ரூ.58 ஆயிரத்து 400-ல் இருந்து ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு சுதாகர் கூறினார்.
Tags:    

Similar News