செய்திகள்
குமாரசாமி

சித்தராமையா சந்தர்ப்பவாத அரசியல்வாதி: குமாரசாமி குற்றச்சாட்டு

Published On 2020-12-23 01:48 GMT   |   Update On 2020-12-23 01:48 GMT
நான் சந்தர்ப்பவாத அரசியல்வாதி அல்ல. சித்தராமையா தான் சந்தர்ப்பவாத அரசியல்வாதி என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குற்றம்சாட்டினார்.
பெங்களூரு :

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் பா.ஜனதா அரசு மீது மென்மையான போக்கை பின்பற்றுவதாக கூறுகிறார்கள். நான் பா.ஜனதா பக்கமும் இல்லை, காங்கிரஸ் பக்கமும் இல்லை. அரசியல் என்பது சக்கர வியூகத்தை போன்றது. அதில் ஒரு முறை மாட்டிக் கொண்டால் அதில் இருந்து வெளியே வருவது கடினம். இன்றைய அரசியலில் பணம் மிக முக்கிய பங்காற்றுகிறது. நான் மவுனமாக இருந்து கொண்டு, பா.ஜனதா அரசின் செயல்பாடுகளை கவனித்து வருகிறேன்.

ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. எங்கள் கட்சியை விட்டு வெளியே காலடி எடுத்து வைத்துள்ளார். நான் வெளிநாடு சென்றதால் கூட்டணி அரசு கவிழ்ந்ததாக அவர் சொல்கிறார். யார்-யார் ரகசிய கூட்டத்தை நடத்தினார்கள் என்பது எனக்கு தெரியும். தேர்தலில் பா.ஜனதா மற்றும் காங்கிரசுக்கு எதிராக தான் எனது போராட்டம் இருக்கும்.

எனது தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஆட்சியில் டி.கே.சிவக்குமாரிடம் செல்வ வளம் கொழிக்கும் துறை இருந்தது. அதனால் தான் அவர் கூட்டணி ஆட்சியை காப்பாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டாரே, தவிர நான் முதல்-மந்திரியாக நீடிக்க வேண்டும் என்று அவர் முயற்சி செய்யவில்லை. கூட்டணி அரசு நீடிப்பதை சித்தராமையா விரும்பவில்லை. அந்த அரசால் அவருக்கு எந்த லாபமும் இல்லை. அதனால் கூட்டணி ஆட்சி கவிழும் என்று அடிக்கடி கூறி வந்தார். இதுபற்றி மாநில மக்களுக்கு நன்றாக தெரியும்.

கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததற்கு நான் காரணம் அல்ல. நான் எந்த தவறும் செய்யவில்லை. சித்தராமையாவே அதற்கு நேரடி காரணம். முதல்-மந்திரியாக இருந்தபோது கண்ணீர் விட்டேன். என்னை ஒரு கிளார்க்கை போல் காங்கிரசார் நடத்தினர். நான் சந்தர்ப்பவாத அரசியல்வாதி அல்ல. சித்தராமையா தான் சந்தர்ப்பவாத அரசியல்வாதி.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Tags:    

Similar News