செய்திகள்
தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

நெய்வேலியில் இரண்டாம் அனல்மின் நிலையத்தின் 7 அலகுகளை மூட மறுப்பு - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

Published On 2020-12-22 20:31 GMT   |   Update On 2020-12-22 20:31 GMT
நெய்வேலி இரண்டாம் அனல்மின் நிலையத்தில் உள்ள 7 அலகுகளை மூட தேசிய பசுமை தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்ததுடன், விபத்துகளை தடுப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள உத்தரவிட்டது.
புதுடெல்லி:

கடலூர் மாவட்டம், நெய்வேலியிலுள்ள அனல் மின் நிலையத்தில் கடந்த ஜூலை 1-ந்தேதி கொதிகலன் வெடித்ததில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 7 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

இது தொடர்பாக ஆங்கில நாளேட்டில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுமான ஏ.கே.கோயல் அமர்வு முன் கடந்த ஜூலை 8-ந்தேதி விசாரணைக்கு வந்தது.

கொதிகலன் வெடித்து விபத்தில் காயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ.5 லட்சத்தை ஒரு வாரத்துக்குள் வழங்க வேண்டும். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய மூவருக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகையை வழங்க ரூ.5 கோடியை கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் 2 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும். ஆய்வு செய்து அறிக்கை 3 மாத காலத்துக்குள் குழு தாக்கல் செய்ய வேண்டும் என்பன போன்ற உத்தரவுகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்திருந்தது.

இந்த தொடர்பாக மீனவ தந்தை கே.செல்வராஜ் குமார் மீனவர் நலச் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்த மனுவையும், தானாக முன் வந்து பதிவு செய்த வழக்கையும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஏகே கோயல் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக நெய்வேலி அனல் மின் நிலையம் அளித்த பதில் மனுவை என்.ஜி.டி. பரிசீலித்தது.

அதில், நெய்வேலி இரண்டாம் அனல்மின் நிலையத்தில் உள்ள 7 அலகுகளை தொடர்ந்து இயக்க மத்திய மின்சார ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும் நெய்வேலி இரண்டாம் அனல்மின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் வழக்கற்று போகவில்லை. அனல்மின்நிலையத்தில் உள்ள கொதிகலன்களின் ஆயுட்காலம் மேலும் 6 ஆண்டு காலம் இயக்கும் வகையில் உள்ளது என கொதிகலன்கள் இயக்குனர் சான்றளித்துள்ளார் என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட தேசிய பசுமை தீர்ப்பாயம், நெய்வேலி இரண்டாம் அனல்மின் நிலையத்தில் உள்ள 7 அலகுகளை மூட உத்தரவிட மறுத்ததுடன், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அவ்வப்போது நிபுணர்களை கொண்டு ஆய்வு நடத்தவும் உத்தரவிட்டது.

மேலும், நெய்வேலி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கில், தீ விபத்துக்கான காரணங்களை பரிசலீத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், நாடு முழுவதும் அனல் மின் நிலையங்களில் தீ விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கைகளை 6 மாதங்களுக்குள் மேற்கொள்ளவும் மத்திய அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.

Tags:    

Similar News