செய்திகள்
கோப்புப்படம்

மாவட்டந்தோறும் ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டுகள் - சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு

Published On 2020-12-21 20:47 GMT   |   Update On 2020-12-21 20:47 GMT
ஊழல் வழக்குகளை விசாரிக்க மாவட்டந்தோறும் ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டுகளை அமைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

ஊழல் வழக்குகளை விசாரிக்க மாவட்டந்தோறும் ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டுகளை அமைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வக்கீல் அஸ்வினிகுமார் உபாத்யாய் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், விடுதலை அடைந்து 73 ஆண்டுகள் ஆகியும், கருப்புபணம், பினாமி சொத்து, வருமானத்துக்கு மீறிய சொத்து, சட்டவிரோத பண பரிவர்த்தனை, வரி ஏய்ப்பு, உணவுப்பொருள் பதுக்கல், ஆள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற வழக்குகள் பதியப்படாத மாவட்டங்களே நாட்டில் இல்லை.

ஊழல் தடுப்பு சட்டங்களை தீவிரமாக அமல்படுத்தாத காரணத்தாலும், மாவட்ட கோர்ட்டுகளில் தேங்கியுள்ள வழக்குகள் காரணமாகவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற வழக்குகள் அதிகரித்து வருகின்றன.

ரூ.100-க்கும் அதிகமான மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்பப் பெறாமலும், நாளொன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே வங்கியிலிருந்து எடுக்க கட்டுப்பாடு விதிக்காமலும், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட சொத்துகளை ஆதார் எண்ணுடன் இணைக்காமலும் தூய்மையான நிர்வாகம் சாத்தியமில்லை.

ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்க, மாவட்டந்தோறும் ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டுகளை அமைக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News