செய்திகள்
டெல்லி சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூட்டத்தின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.

டெல்லியில் நிலவும் கடும் குளிருக்கு மத்தியிலும் விவசாயிகள் போராட்டம் தீவிரம்

Published On 2020-12-20 02:11 GMT   |   Update On 2020-12-20 02:11 GMT
டெல்லியில் நிலவும் கடும் குளிருக்கு மத்தியிலும் விவசாயிகள் தீவிரமான போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
புதுடெல்லி:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்பு உள்ளிட்டவற்றுக்கு பெரும் ஆபத்து எனக்கூறி விவசாயிகள் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர். இந்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி அவர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு குவிந்து வருகிறது.

இந்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர். பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இந்த விவசாயிகளின் போராட்டம் நேற்று 24-வது நாளை எட்டியது.

இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்பு முறை போன்றவற்றுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு அளித்து வரும் உறுதிமொழிகளை விவசாயிகள் ஏற்க மறுத்து விட்டனர். இதனால் அரசுடனான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

இதைப்போல இந்த போராட்டத்துக்கு எதிரான வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டும், விவசாயிகள் போராட்டத்தில் தலையிட மறுத்து விட்டது. போராடுவது அவர்களது உரிமை எனக்கூறி வழக்கை ஒத்தி வைத்து உள்ளது.

இதனால் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்தநிலையில் டெல்லியில் நாளாக நாளாக குளிரின் வீரியம் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டின் மிகவும் குளிரான நாளாக நேற்று அறியப்பட்டு உள்ளது. சராசரி வெப்பநிலை 3.9 செல்சியஸ் அளவுக்கு குறைந்தது. நகரின் சில பகுதிகளில் 3.3 மற்றும் 3.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இவ்வாறு கடுமையான குளிர் வாட்டியபோதும் விவசாயிகளின் மன உறுதியில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அவர்கள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனால் டெல்லி எல்லைப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையே விவசாயிகளின் போராட்டத்தால் எல்லைப்புற சாலைகளில் போக்குவரத்து தொடர்ந்து முடங்கியுள்ளது. அந்தவகையில் காஜிப்பூர் வழியாக நொய்டா, காஜியாபாத் போன்ற பகுதிகளுக்கு செல்லும் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு உள்ளது. அந்த சாலையை பயன்படுத்துவோர் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு டெல்லி போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

அங்கு மேலும் அடைக்கப்பட்டு வரும் சாலைகள் பற்றிய விவரங்களை தங்கள் டுவிட்டர் தளத்தில் தினமும் பதிவேற்றி வரும் போலீசார், டெல்லிவாசிகள் போக்குவரத்துக்கு இடையூறின்றி பயணிப்பதற்கு மாற்று ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News