செய்திகள்
எடியூரப்பா

கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகள் ஜனவரி 1-ந் தேதி திறப்பு: முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு

Published On 2020-12-20 01:09 GMT   |   Update On 2020-12-20 01:09 GMT
கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக 9 மாதங்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் ஜனவரி 1-ந்தேதி திறக்கப்படுவதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
பெங்களூரு:

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவலுக்கு மத்தியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்தப்பட்டது. அதன் பின்னர் கொரோனா பரவல் தீவிரம் அடைந்தது. இதனால் நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் கர்நாடகத்தில் கொரோனா அலை 2-வது கட்டமாக எப்படி உள்ளது என்பதை பொறுத்து பள்ளி, கல்லூரிகளை திறக்கலாம் என்று அரசுக்கு நிபுணர்கள் குழுவினர் ஏற்கனவே சில பரிந்துரைகளை வழங்கி இருந்தனர்.

இந்த நிலையில், கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்தது. இதையடுத்து, கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் நேற்று மதியம் கிருஷ்ணா இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

முதலில் நிபுணர் குழுவின் பரிந்துரைகள் குறித்து அதிகாரிகளுடன், எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். அதாவது பொதுத்தேர்வு நடைபெறுவதால் 10-ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி. 2-ம் ஆண்டு வகுப்புகளை புத்தாண்டில்முதல் (ஜனவரி 1-ந்தேதி) தொடங்கலாம் என்று நிபுணர் குழுவினர் தெரிவித்திருந்தனர். அந்த குழுவினர் பரிந்துரையின்படியே கர்நாடகத்தில் புத்தாண்டில் இருந்தே 10-ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி. 2-வது ஆண்டுக்கான வகுப்புகளை தொடங்குவது என்றும், இதற்காக பள்ளி, கல்லூரிகளை திறப்பது என்றும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக நிபுணர் குழுவினர் அரசுக்கு சில பரிந்துரைகளை வழங்கி இருந்தனர். அதுகுறித்து ஒரு மணிநேரத்திற்கும் மேலாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி, கர்நாடகத்தில் புத்தாண்டான ஜனவரி 1-ந் தேதி முதல் 10-ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கான வகுப்புகளை தொடங்கி நடத்துவதற்காக பள்ளி, கல்லூரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டு முதல் மாநிலம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும். 6-ம் வகுப்பில் இருந்து 9-ம் வகுப்பு வரை வித்யாகமா திட்டத்தின் கீழ் வகுப்புகள் நடத்துவதற்கும் நிபுணர் குழுவினர் பரிந்துரை செய்திருந்தனர். அதன்படி, 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை வித்யாகமா திட்டத்தின் கீழ் புத்தாண்டு முதல் பள்ளிகள் திறக்கப்படும். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதால், அதற்கு தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News