செய்திகள்
வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்

ஜம்மு காஷ்மீர் இறுதிக்கட்ட மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் 51 சதவீத வாக்குப்பதிவு

Published On 2020-12-19 20:53 GMT   |   Update On 2020-12-19 20:53 GMT
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற இறுதிக்கட்ட மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் 51 சதவீத வாக்குகள் பதிவானது.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரத்து செய்யப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. அதனுடன் சேர்த்து உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் 7 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. 
 
இதற்கிடையே, இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குச் சாவடிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன. மதியம் 2 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 
 
ஜம்முவில் 15 தொகுதிகள், காஷ்மீர் பிராந்தியத்தில் 13 தொகுதிகள் என மொத்தம் 28 மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 168 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதுதவிர உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர் பதவிகள் தவிர, மீதமுள்ள பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 84 பஞ்சாயத்து தலைவர்கள், 285 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் 6.40 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 1703 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி), மக்கள் மாநாடு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியை உருவாக்கி முதல் முறையாக தேர்தலை சந்திக்கின்றன. தேசிய கட்சிகளான பா.ஜ.க. மற்றும் காங்கிரசும் களத்தில் உள்ளன.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சிலின் இறுதிக்கட்ட தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 51 சதவீத வாக்குகள் பதிவானது.

மொத்தம் உள்ள 280 மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் 22-ம் தேதி எண்ணப்பட உள்ளன.
Tags:    

Similar News