செய்திகள்
விமான சேவை

ஏர் பப்பிள்ஸ் திட்டம் விரிவாக்கம்... இந்தியர்கள் இனி பல நாடுகளுக்கு பயணம் செய்யலாம்

Published On 2020-12-19 06:33 GMT   |   Update On 2020-12-19 06:33 GMT
விமான போக்குவரத்து தொடர்பான ஏர் பப்பிள்ஸ் ஒப்பந்தத்தை இந்தியா விரிவுபடுத்தி உள்ளதால், இந்தியர்கள் இனி பல நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள முடியும்.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச விமான பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சொந்த நாடுகளுக்கு திரும்ப விரும்புவோர் மற்றும் அத்தியாவசிய பயணங்களை மேற்கொள்பவர்களுக்காக ஏர் பப்பிள்ஸ் என்ற இருதரப்பு ஒப்பந்தம் செய்து, கட்டுப்பாடுகளை தளர்த்தி விமானங்கள் இயக்கப்படுகின்றன. 

இந்தியாவில் வந்தே பாரத் மிஷன் மற்றும் ஏர் பப்பிள்ஸ் ஒப்பந்தம் ஆகிய இரு வழிகளில் சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக மத்திய அரசு பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் லட்சக்கணக்கானோர் நாடு திரும்பி உள்ளனர். அதன்பின்னர் இந்த ஏர் பப்பிள்ஸ் ஒப்பந்தத்தை மேலும் விரிவுபடுத்தியது இந்தியா. இதன்மூலம் பல நாடுகளுக்கு இந்தியர்கள் பயணிக்க முடியும்.

குறிப்பாக, ஐரோப்பா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளிலிருந்து தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு பயணிகளை இந்தியா அனுமதித்துள்ளது. அதாவது ஏர் பப்பிள்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் பிரான்ஸ், ஜெர்மனி, ஹாலந்து, துபாய், அபுதாபி மற்றும் தோஹா ஆகிய நாடுகளுக்குச் சென்று பின்னர் அங்கிருந்து தென் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவுக்கு செல்லும் விமானங்களில் பயணிக்கலாம்.

இந்தியா இதுவரை 23 நாடுகளுடன் ஏர் பப்பிள்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. உலகளவில் கொரோனா தாக்கம் தணிந்து, சர்வதேச விமான போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில், ஏர் பப்பிள்ஸ் மற்றும் வந்தே பாரத் மிஷன் விமானங்கள் மூலம் தகுதிவாய்ந்த பயணிகள் சர்வதேச பயணத்தை மேற்கொள்ள முடியும்.
Tags:    

Similar News