செய்திகள்
தேசிய கொடி பேனர் - ஜெய் ஸ்ரீ ராம் பேனர்

பாஜகவின் ’ஜெய் ஸ்ரீ ராம்’ பேனருக்கு பதிலடியாக நகராட்சி கட்டிடத்தில் தேசியக்கொடி பேனர்

Published On 2020-12-18 21:03 GMT   |   Update On 2020-12-18 21:03 GMT
கேரளாவின் பாலக்காடு நகராட்சியை மீண்டும் கைப்பற்றியதால் நகராட்சி கட்டிடத்தில் பாஜகவினர் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று பதிக்கப்பட்டிருந்த பேனரை வைத்தனர்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த வாரம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்றது. சில இடங்களில் பாஜக வெற்றிபெற்றது. குறிப்பாக பாலக்காடு நகராட்சியை பாஜக தக்கவைத்துக்கொண்டது. 

நகராட்சியை கைப்பற்றியதை கொண்டாடும் வகையில் கடந்த 16-ம் தேதி பாலக்காடு நகராட்சி கட்டிடத்திற்குள் நுழைந்த பாஜகவினர் கட்டிடத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் அடங்கிய பேனர்களை கட்டிடத்தின் ஒருபுறத்தில் வைத்தனர். 

மேலும், மராத்திய மன்னர் சத்திரபதி சிவாஜியின் புகைப்படம் அடங்கிய மற்றொரு பேனரையும் வைத்தனர். அந்த பேனரில் ’ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற வாசகம் மலையாளத்தில் பதிக்கப்பட்டிருந்தது. சிலர் கட்டிடத்தின் உச்சியில் நின்றுகொண்டு பாஜக கொடியையும் அசைத்தன வண்ணம் இருந்ததனர்.

இந்த சம்பவம் நகராட்சி கட்டிடத்தில் இருந்த சிலரால் வீடியோவாக எடுக்கப்பட்டது. பின்னர் இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதையடுத்து, அரசு கட்டிடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், அந்த இரண்டு பேனர்களும் உடனடியாக நீக்கப்பட்டது.



இந்நிலையில், பாஜகவினரின் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ பேனருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணியாக செயல்பட்டு வரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று பாலக்காடு நகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர்.

அங்கு பாஜகவினர் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ பேனர் வைத்திருந்த அதே பகுதியில் இந்திய தேசியக்கொடி பேனரை நிறுவினர். மேலும், அந்த கட்டிடத்தில் இந்திய தேசியக்கொடியை பறக்கவிட்டனர்.

மேலும், ‘இது ஒன்றும் ஆர்எஸ்எஸ் அலுவலகம் அல்ல. இது நகராட்சி அலுவலகம். இது ஒன்றும் குஜராத் அல்ல கேரளா’ என்ற வாசகம் அடங்கிய பேனருடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த சம்பவங்களை தொடர்ந்து பாலக்காடு நகராட்சி அலுவலகத்தில் நேற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டனர்.
Tags:    

Similar News