செய்திகள்
மம்தா பானர்ஜி

மத்திய அரசு-மேற்கு வங்காள அரசு மோதல் முற்றியது: ‘பணிய மாட்டோம்’ என மம்தா ஆவேசம்

Published On 2020-12-18 02:28 GMT   |   Update On 2020-12-18 02:28 GMT
3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை விடுவித்து மத்திய பணிக்கு அனுப்புமாறு மேற்கு வங்காள அரசுக்கு மத்திய அரசு மீண்டும் கடிதம் எழுதி உள்ளது. ஆனால், மத்திய அரசுக்கு பணிய மாட்டோம் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தா :

பா.ஜனதா தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கடந்த வாரம் மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவரது கார் அணிவகுப்பு மீது திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் கல் வீசினர். இதில், பா.ஜனதா நிர்வாகிகளின் கார்கள் சேதமடைந்தன. சில நிர்வாகிகள் காயமடைந்தனர்.

இதுகுறித்து மத்திய அரசுக்கு கவர்னர் ஜெகதீப் தாங்கர் அறிக்கை அனுப்பினார். மாநில அரசு, அறிக்கை அனுப்பவில்லை.

இதுபற்றி விளக்கம் அளிக்க மேற்கு வங்காள மாநில அரசின் தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது. ஆனால் அவர்களை அனுப்ப இயலாது என்று மாநில அரசு கூறிவிட்டது.

ஜெ.பி.நட்டாவின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்றிருந்த டயமண்ட் ஹார்பர் போலீஸ் சூப்பிரண்டு போலாநாத் பாண்டே, டி.ஐ.ஜி. பிரவீன் திரிபாதி, கூடுதல் டி.ஜி.பி. ராஜீவ் மிஸ்ரா ஆகிய 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை விடுவித்து, மத்திய பணிக்கு அனுப்பி வைக்குமாறு மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியது. ஆனால், அவர்களை மத்திய பணிக்கு அனுப்ப முடியாது என்று கடந்த 12-ந்தேதி மாநில அரசு கூறிவிட்டது.

இந்தநிலையில், நேற்று மத்திய உள்துறை அமைச்சகம், மேற்கு வங்காள அரசுக்கு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பியது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே சர்ச்சை எழும்போது, மத்திய அரசின் முடிவை மாநில அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐ.பி.எஸ். பணி விதிமுறை கூறுகிறது. 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு மத்திய பணி ஒதுக்கப்பட்டு இருப்பதால், அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இதற்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆவேசமாக பதில் அளித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவு, கூட்டாட்சி முறையின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது. இது அரசியல் சட்டத்துக்கு முரணானது. முற்றிலும் ஏற்க முடியாதது.

மாநில அரசின் ஆட்சேபனையை மீறி 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய பணிக்கு அனுப்ப மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு, ஐ.பி.எஸ். பணி விதிமுறைகளை அப்பட்டமாக துஷ்பிரயோகம் செய்வது ஆகும்.

மாநில அரசை மறைமுகமாக கட்டுப்படுத்தும் மத்திய அரசின் முயற்சியை அனுமதிக்க மாட்டோம். இந்த ஜனநாயக விரோத சக்திகளுக்கு அடிபணிய மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News