செய்திகள்
விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளின் போராட்டம் மற்றவர்களின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது -உச்ச நீதிமன்றம்

Published On 2020-12-17 08:30 GMT   |   Update On 2020-12-17 08:30 GMT
விவசாயிகள் போராடும் முறையை மாற்றி, பிற குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க நினைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

நேற்று இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, விவசாயிகள் பிரச்சினை விரைவில் தேசிய பிரச்சினையாக மாறும் என்பதால், இந்த பிரச்சனைகளை தீர்க்க, தேசிய அளவில் குழு அமைக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரும் மனுக்கள் மீது மத்திய அரசு மற்றும் டெல்லி, அரியானா மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி கூறியதாவது:-

விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது, அதேசமயம் போராட்டம் எந்தஒரு தனிநபருடைய வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையக் கூடாது. போராடும் முறையை மாற்றி, பிற குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க நினைக்கிறோம்.

நாங்களும் இந்தியர்கள்தான், விவசாயிகளின் துயரங்களை நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம், அவர்களின் நிலைமைக்காக அனுதாபப்படுகிறோம். நீங்கள் (விவசாயிகள்) உங்களின் போராட்டப் பாதையை மட்டும் மாற்ற வேண்டும். உங்கள் வழக்கில் நீங்கள் வாதிட முடியும் என்பதை நாங்கள் உறுதி செய்வோம். மேலும், பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக ஒரு குழுவை அமைக்க நாங்கள் யோசித்து வருகிறோம்.

இவ்வாறு தலைமை நீதிபதி தெரிவித்தார்.

‘அரசியல் சாசனம் வழங்கி உள்ள உரிமை ஒரு நகரத்தை கைப்பற்றுவதாக இருக்கக்கூடாது. டெல்லி சாலைகளை தடுப்பதால், நகரத்தில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வருகை குறைந்து, மக்கள் பசியால் வாடும் நிலைமையை உருவாக்கக்கூடும். பேச்சுவார்த்தை மூலம் உங்கள் (விவசாயிகள்) நோக்கத்தை நிறைவேற்ற முடியும். சாலையில் அமர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பது பிரச்சினையை தீர்க்க உதவாது’ என்றும் நீதிபதிகள் கூறினர்.
Tags:    

Similar News