செய்திகள்
கோப்பு படம்

விவசாயிகள் போராட்டம் தீவிரமடையும் நிலையில் நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்

Published On 2020-12-15 02:56 GMT   |   Update On 2020-12-15 02:56 GMT
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது.
புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களின் போராட்டம் இன்று 20-வது நாளை எட்டியுள்ளது. அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களிலும் விவசாய சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 5 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகள் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம் குறித்தும் வேளாண்சட்டங்கள் குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

நாளை காலை 11.25 மணிக்கு காணொலி காட்சி மூலம் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் நாளை நடைபெற உள்ள மத்திய அமைச்சரவை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. 
Tags:    

Similar News