செய்திகள்
எடியூரப்பா கோ பூஜை செய்து வழிபட்டதை படத்தில் காணலாம்.

பசுவதை தடைக்கு அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு: எடியூரப்பா

Published On 2020-12-12 02:15 GMT   |   Update On 2020-12-12 02:15 GMT
மேல்-சபையில் மசோதாவை நிறைவேற்ற முடியாததால் பசுவதை தடைக்கு அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
பெங்களூரு : கர்நாடக சட்டசபையில் பசுவதை தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால், மேல்-சபையில் அந்த மசோதாவை ஆளும் கட்சியால் நிறைவேற்ற முடியவில்லை. ஏனென்றால் மேல்-சபையின் தலைவராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அக்கட்சி இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இதையடுத்து ஜனதா தளம்(எஸ்) ஆதரவுடன் மேலவை தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கான கடிதத்தை பா.ஜனதா, மேலவை செயலாளரிடம் வழங்கியுள்ளது. இதன் மீது நம்பிக்கை வாக்கெடுப்பை பா.ஜனதா கோரியது. ஆனால் இதை நிராகரித்துவிட்ட மேலவை தலைவர் சபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இதையடுத்து, இந்த குளிர்கால கூட்டத்தொடரில் பசுவதை தடை சட்ட மசோதாவை நிறைவேற்ற முடியாத நிலைக்கு ஆளும் பா.ஜனதா அரசு தள்ளப்பட்டுள்ளது. 75 உறுப்பினர்களை கொண்ட மேல்-சபையில் பா.ஜனதாவுக்கு 31 உறுப்பினர்களும், காங்கிரசுக்கு 29 பேரும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 14 பேரும், ஒரு சுயேச்சை உறுப்பினரும் உள்ளனர். இந்த நிலையில் பசுவதை தடை சட்ட மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியதை பா.ஜனதாவினர் கொண்டாடி வருகிறார்கள். முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று பெங்களூருவில் உள்ள தனது காவேரி இல்லத்தில் பசு மாடுகளுக்கு கோபூஜை செய்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- பசுவதை தடை சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி இருக்கிறோம். மேல்-சபையில் அதை நிறைவேற்ற மேலவை தலைவர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அதனால் நாங்கள் பசுவதை தடைக்கு அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு செய்துள்ளோம். இந்து மதத்தில் பசு மாடுகளுக்கு முக்கியத்துவம் இருப்பது உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் விவசாயிகளுக்கு வருமானத்தை தருவதாகவும் பசு மாடுகள் உள்ளன. மாடுகள் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த மசோதாவுக்காக கர்நாடகத்தில் 90 சதவீத மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். நாங்கள் எங்களின் தேர்தல் அறிக்கையில் இதுகுறித்து தெரிவித்து இருந்தோம். நான் முன்பு முதல்-மந்திரியாக இருந்தபோது இந்த மசோதாவை நிறைவேற்றினோம். அப்போது இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கவில்லை. இப்போது நாங்கள் மீண்டும் இந்த பசுவதை தடை சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ளோம். கர்நாடக மேல்-சபையை வருகிற 15-ந் தேதி கூட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து கவர்னருக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். சபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்க மேலவை தலைவருக்கு அதிகாரம் இல்லை. சபை அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் 15-ந் தேதி வரை சபையை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் மேலவை தலைவரும் கலந்து கொண்டார். ஆனால் சபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது சரியல்ல. இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Tags:    

Similar News