செய்திகள்
ஸ்வப்னா சுரேஷ்

கொலை மிரட்டல் எதிரொலி : சிறையில் ஸ்வப்னா சுரேசுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

Published On 2020-12-10 22:00 GMT   |   Update On 2020-12-10 22:00 GMT
துபாயில் இருந்து தூதரக பார்சல் மூலம் கேரளாவுக்கு தங்கம் கடத்திய வழக்கில் சிறையில் உள்ள ஸ்வப்னா சுரேசுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

துபாயில் இருந்து தூதரக பார்சல் மூலம் கேரளாவுக்கு தங்கம் கடத்திய வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் அட்ட குளங்கரை மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரிடம் தொடர்பில் இருந்ததாகவும், தங்கம் கடத்தலுக்கு உதவியதாகவும் கேரள முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் தங்கம் கடத்தல் விவகாரத்தில் மந்திரி ஜலீல் உள்ளிட்ட சிலரது பெயரும் அடிபட்டன. இது ஆளுங்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. இந்தநிலையில் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், தங்கம் கடத்தல் கும்பலுடன் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், ஆதலால் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று எர்ணாகுளம் கோர்ட்டில் தனது வக்கீல் மூலமாக ஸ்வப்னா சுரேஷ் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சிறையில் இருந்த என்னை சிலர் சந்தித்து, தங்கம் கடத்தல் தொடர்பாக, முக்கிய பிரமுகர்களின் பெயர்களை வெளிப்படுத்தினால் உனது குடும்பத்தையே காலி செய்து விடுவோம் என மிரட்டியதாக கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்ட கோர்ட்டு, ஸ்வப்னா சுரேசுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க கேரள சிறைத்துறை டி.ஜி.பி. ரிஷிராஜ் சிங்கிற்கு உத்தரவிட்டது. இதையடுத்து சிறையில் உள்ள ஸ்வப்னா சுரேசுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News