செய்திகள்
பிரதமர் மோடி

பிரதமரின் வெளிநாட்டு பயண விவரங்களை அளிக்க முடியாது - டெல்லி ஐகோர்ட்டில் விமானப்படை மனு

Published On 2020-12-09 20:29 GMT   |   Update On 2020-12-09 20:29 GMT
பிரதமரின் வெளிநாட்டு பயண விவரங்களை அளிக்க முடியாது என்று டெல்லி ஐகோர்ட்டில் இந்திய விமானப்படை மனு தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி:

இந்திய விமானப்படையின் ஓய்வு பெற்ற அதிகாரி லோகேஷ் கே.பத்ரா என்பவர், கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங், பின்னர் பிரதமர் ஆன மோடி ஆகியோரது வெளிநாட்டு பயணத்துக்கு பயன்படுத்தப்பட்ட சிறப்பு விமானங்கள் பற்றிய விவரங்களை அளிக்குமாறு மத்திய தகவல் ஆணையத்தில் விண்ணப்பித்தார்.

அதை ஏற்று இந்த விவரங்களை அளிக்குமாறு இந்திய விமானப்படைக்கு மத்திய தகவல் ஆணையம் கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது. பிரதமரின் மொத்த பயண விவரங்களையும், அவரது பாதுகாப்புக் காக சென்ற கருப்பு பூனைப்படை வீரர்களின் பெயர்களையும் அளிக்குமாறு கூறியிருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி ஐகோர்ட்டில் இந்திய விமானப்படை நேற்று ஒரு மனு தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

லோகேஷ் கே.பத்ரா என்பவர் கேட்ட தகவல்கள் அளிக்கப்பட முடியாதவை என்பதை மத்திய தகவல் ஆணையம் உணர தவறி விட்டது. இந்த தகவல்கள் பாதுகாப்பு முக்கித்துவம் வாய்ந்தவை என்பதால், இவற்றை அளிக்க முடியாது.

இவை பிரதமரின் பாதுகாப்பு கட்டமைப்பு செயல்படும் விதம் தொடர்பானவை. இவற்றை பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுவெளியில் கொண்டுவர முடியாது.

அப்படி வெளியே தெரிவிப்பது, நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கும். நாட்டின் பாதுகாப்பு நலன்கள் மற்றும் பொருளாதார நலன்களுக்கு எதிராக அமைந்து விடும்.

இவ்வாறு இந்திய விமானப்படை கூறியுள்ளது.

இந்த மனு, நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
Tags:    

Similar News