செய்திகள்
மந்திரி பசவராஜ் பொம்மை

போதைப்பொருள் வழக்கில் கைதானவர்களுக்கு கடும் தண்டனை: மந்திரி பசவராஜ் பொம்மை

Published On 2020-12-09 02:34 GMT   |   Update On 2020-12-09 02:34 GMT
போதைப்பொருள் வழக்கில் கைதானவர்களுக்கு கடும் தண்டனை கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று சட்டசபையில் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் ஈஸ்வர் கன்ட்ரே கேட்ட கேள்விக்கு போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளிக்கையில் கூறியதாவது:-

எங்கள் அரசு போதைப்பொருள் கும்பலுக்கு எதிராக போர் தொடுத்துள்ளது. எங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தம் வந்தது. நாங்கள் எந்த அழுத்தத்திற்கும் அடி பணியவில்லை. இந்த வழக்கில் சிக்கியவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யவும், இது தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்யவும், அரசு முடிவு செய்துள்ளது. சூதாட்டம் ஒரு சமூக பிரச்சினை ஆகும். இதற்கு முடிவு கட்ட வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில் முந்தைய அரசுகளை விட எங்கள் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கர்நாடக போலீஸ் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பாக தேசிய போலீஸ் பள்ளி தலைவருடன் ஆலோசனை நடத்தி இருக்கிறோம். விரைவில் அதில் சட்டத்திருத்தம் செய்யப்படும். சூதாட்டம் போன்ற விவகாரங்களுக்கு சட்டத்தால் மட்டும் தீர்வு கிடைத்துவிடாது. மக்களிடமும் விழிப்புணர்வு வர வேண்டும். போதைப்பொருள் நடமாட்டத்தை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். இது எங்கள் அரசின் நோக்கம். இதுகுறித்து மத்திய அரசுடன் நாங்கள் பேச்சு நடத்தி வருகிறோம்.

தேசிய போதைப்பொருள் சட்டத்தை திருத்தம் செய்ய எங்களால் முடியாது. அது நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. தேசிய போதைப்பொருள் சட்டத்தின்படி கடந்த 2017-ம் ஆண்டு 1,126 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 1,095 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 197 வழக்குகளில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டு 1,031 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 951 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 167 வழக்குகளில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு 1,116 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது, 256 வழக்குகளில் தண்டனை பெற்று தரப்பட்டது. நடப்பு ஆண்டில் இதுவரை 3,852 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 233 வழக்குகளில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்துள்ளது.

போதைப்பொருள் வழக்குகளை விரைந்து முடிக்கவும், போதைப்பொருள் ஆய்வகங்களை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். மைசூரு, மங்களூரு, பெலகாவி, கலபுரகி மற்றும் உப்பள்ளி-தார்வார் நகரங்களில் இத்தகைய ஆய்வகங்கள் திறக்கப்படும். போதைப்பொருள் வழக்கில் தொடர்பு உடையவர்கள் தேசிய போதைப்பொருள் தடை வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதால் அவர்களுக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. அவர்களுக்கு ஓராண்டு ஜாமீன் கிடைக்காது. போதைப்பொருளுக்கு எதிரான போரில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை.

கலபுரகி, பீதர் போன்ற இடங்களில் பொழுதுபோக்கு கிளப்புகள் சட்டவிரோதமாக செயல்படுவதாக புகார்கள் வந்துள்ளன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மைசூரு, பெங்களூரு உள்பட சில நகரங்களில் ஹூக்கா கூடங்கள் செயல்படுவதாக எங்களின் கவனத்திற்கு வந்துள்ளது. இவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விசா காலம் முடிவடைந்த பிறகும் சட்டவிரோதமாக கர்நாடகத்தில் தங்கியுள்ள வெளிநாட்டினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

Similar News