செய்திகள்
போராட்டம் நடத்திய ராணுவ வீரர்

விவசாயிகளுக்கு ஆதரவாக சீருடையில் போராட்டம் நடத்திய ராணுவ வீரர் கைது

Published On 2020-12-09 02:04 GMT   |   Update On 2020-12-09 02:04 GMT
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக உப்பள்ளியில் விவசாயிகளுடன் சேர்த்து சீருடையில் போராட்டம் நடத்திய ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
உப்பள்ளி :

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று கர்நாடகம் உள்பட நாடு முழுவதும் முழு அடைப்பு நடந்தது. இதேபோல் கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி கித்தூர் ராணி சென்னம்மா சர்க்கிள் அருகே விவசாயிகள் உள்பட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது குந்துகோல் தாலுகா பரத்வாடா கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரரான ரமேஷ் மாடல்லி என்பவர் ராணுவ சீருடையில் சாலையில் அமர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்த போராட்டத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி ரமேஷ் மாடல்லி கோஷமிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த உப்பள்ளி புறநகர் போலீசார் போராட்டம் நடந்த இடத்திற்கு விரைந்து ராணுவ வீரர் ரமேஷ் மாடல்லியை கைது செய்து வேனில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதுபற்றி ரமேஷ் மாடல்லி கூறுகையில், நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். அதனால் விவசாயிகள் படும் கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும். அதனால் தான் விவசாயிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினேன் என்றார். கைதான ராணுவ வீரர் ரமேஷ் மாடல்லி, அசாம் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News