செய்திகள்
பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசி போடும் பணிக்கு செல்போன் தொழில்நுட்பம் - பிரதமர் மோடி தகவல்

Published On 2020-12-08 22:34 GMT   |   Update On 2020-12-08 22:34 GMT
கொரோனா தடுப்பூசி போடும் பணிக்கு செல்போன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். உரிய நேரத்தில் 5ஜி சேவை அறிமுகமாக பாடுபடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
புதுடெல்லி:

இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருகிறது. பைசர், சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக் ஆகிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள், இந்தியாவில் தங்கள் தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன. இந்தநிலையில், நேற்று மொபைல் சேவை சங்கம் ஏற்பாடு செய்த இந்திய மொபைல் மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பேசினார். அவர் பேசியதாவது:-

மொபைல் போன் தொழில்நுட்பம், கோடிக்கணக்கானோருக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பலன்களை அளித்து வருகிறது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ரொக்கமில்லா பரிமாற்றத்துக்கும் மொபைல்போன் தொழில்நுட்பமே காரணம். சுங்கச்சாவடி கட்டண வசூலுக்கும் இந்த தொழில்நுட்பம் பயன்படுகிறது.

இந்தியாவில் உலகத்திலேயே பெரிய அளவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளது. அதற்கும் மொபைல் போன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

வருங்காலத்தில் விரைவான தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு வாய்ப்பு இருக்கிறது. உரிய நேரத்தில் 5ஜி சேவை அறிமுகம் ஆவதற்கு நாம் ஒன்றுபட்டு பாடுபடுவோம். 5ஜி சேவையால் பலமடங்கு வேகத்தில் இணையசேவை கிடைக்கும்.

மொபைல்போன் உற்பத்திக்கு மிகவும் விரும்பப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்து வருகிறது. தொலைத்தொடர்பு சாதனங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவை உலகளாவிய தொலைத்தொடர்பு சாதனங்கள் உற்பத்தி கூடமாக ஆக்குவதற்கு எல்லோரும் பாடுபடுவோம்.

இன்னும் 3 ஆண்டுகளுக்குள், இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களையும் அதிவேக கண்ணாடி இழை கேபிள் மூலம் இணைத்து இணைய வசதி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சாதாரண தொலைபேசி இணைப்புடன் கூடிய அகண்ட அலைவரிசையை பெருமளவில் மக்களிடையே கொண்டு செல்வதில் ஆர்வமாக இருக்கிறோம்.

புதிய தொழில்நுட்பம் வர வர மொபைல்போன்களை மாற்றும் கலாசாரம் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில்கொண்டு, மின்னணு கழிவுகளை சிறப்பாக கையாள சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் 100 கோடிக்கு மேற்பட்டோர் மொபைல்போன் பயன்படுத்துகின்றனர். அவர்களில் 75 கோடிக்கு மேற்பட்டோர் இணைய வசதியை பயன்படுத்துகின்றனர்.

இவர்களில் பாதிப்பேர், கடந்த 4 ஆண்டுகளில் இணைய வசதியை பயன்படுத்த தொடங்கியவர்கள் ஆவர். அதிலும், கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள். இதன்மூலம் இந்தியாவில் எவ்வளவு வேகமாக இணைய வசதி ஊடுருவி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உலகத்திலேயே தொலைத்தொடர்பு கட்டணம் குறைவாக இருப்பது இந்தியாவில்தான். இங்குதான் மொபைல் செயலி சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. மொபைல் செயலி அறிமுகமாகி சில ஆண்டுகளே ஆனபோதிலும், பல ஆண்டுகளாக உள்ள கம்பெனிகளின் மதிப்பை இவை உயர்த்தி இருக்கின்றன.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Tags:    

Similar News