செய்திகள்
கோப்புப்படம்

ஆந்திராவில் மர்மநோய்க்கு குடிநீரின் உலோக தன்மையே காரணம் - முதல்கட்ட ஆய்வில் தகவல்

Published On 2020-12-08 19:09 GMT   |   Update On 2020-12-08 19:09 GMT
ஆந்திராவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மர்மநோய்க்கு, குடிநீர், பாலில் காணப்படும் உலோகத் தன்மையே காரணம் என முதல்கட்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
ஏலூர்:

ஆந்திர மாநிலம் ஏலூரில் திடீரென ஏற்பட்ட மர்மநோயால் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். ஒருவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் மற்றும் மத்திய, மாநில மருத்துவ நிறுவன நிபுணர்களும், சுகாதார அதிகாரிகளும் முதல்கட்ட ஆய்வை மேற்கொண்டு, அதன் அறிக்கையை முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியிடம் நேற்று அளித்தனர்.

அந்த ஆய்வறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் பருகிய குடிநீர், பாலில் காணப்படும் காரீயம், நிக்கல் போன்ற கனஉலோகங்கள்தான் பாதிப்புக்கு காரணம் என தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து, நோயாளிகளின் உடலில் கனஉலோகங்களின் தாக்கம் குறித்து முழுமையாக ஆராயவும், சிகிச்சைமுறைகளை தொடர்ந்து கண்காணிக்கவும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அனுப்பிய 3 பேர் குழுவுடன், உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர்கள் குழுவும் நேற்று ஏலூர் சென்று மாதிரிகளை சேகரித்தது. மர்மநோய் பாதிப்புக்கான முழுமையான காரணம், மத்திய குழு அறிக்கை சமர்ப்பித்த பிறகுதான் தெரியவரும் என்று அதிகாரிகள் கூறினர். இந்திய வேதித்தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகள் மேற்கொண்டுள்ள ஆய்வு முடிவுகளும் விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.

மர்மநோயால் இதுவரை 505 பேர் பாதிக்கப்பட்டதில், 370 பேர் குணமடைந்து ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். 139 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

ஏலூர் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் சிறப்பு துப்புரவு பணி நடைபெற்றது. இத்தொகுதி எம்.எல்.ஏ.வும், துணை முதல்-மந்திரியுமான ஏ.கே.கே. ஸ்ரீனிவாஸ் அப்பணிகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் விரைவாக குணமடைந்து வருவதாகவும், யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறினார்.
Tags:    

Similar News