செய்திகள்
கைது

கேரளாவில் கவரிங் நகைகளை அடகு வைத்து அரசு வங்கியில் ரூ.1.69 கோடி மோசடி செய்த பெண் கைது

Published On 2020-12-08 08:00 GMT   |   Update On 2020-12-08 08:00 GMT
கேரளாவில் கவரிங் நகைகளை அடகு வைத்து அரசு வங்கியில் ரூ.1.69 கோடி மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள அரசு வங்கியில் தணிக்கை துறை அதிகாரிகள் ஆண்டு தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வயநாடு பகுதியை சேர்ந்த பிந்து(வயது43) என்ற பெண் 44 முறை நகைக்கடன் வாங்கி உள்ளதை கண்டு பிடித்தனர்.

இதையடுத்து அந்த பெண்ணின் வங்கி கணக்கு உள்ளிட்ட விபரங்களும் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது அவர் 9 வங்கி கணக்குகளை பயன்படுத்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து 44 முறை நகைகளை அடகு வைத்து ரூ. 1 கோடியே 69 லட்சத்து 51 ஆயிரத்து 385 வரை பணம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், பிந்து வங்கியில் அடகு வைத்த நகைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் அடகு வைத்த 5.5 கிலோ நகைகள் அனைத்தும் கவரிங் நகைகள் என்பது தெரியவந்தது. அவர் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ. 1 கோடியே 69 லட்சத்து 51 ஆயிரத்து 385 பணத்தை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து கோழிக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் மாநகர போலீஸ் உயர் அதிகாரி ஜார்ஜ் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து பிந்துவை போலீசார் கைது செய்தனர்.

அவர் 44 முறை கவரிங் நகைகளை அடகு வைத்து பணம் மோசடி செய்திருப்பதால், வங்கி ஊழியர்களுக்கும் மோசடியில் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.

அதில் அந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளர் உள்பட 9 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News