செய்திகள்
மழை

ஆந்திராவில் கனமழை- 5 ஆண்டுக்கு பிறகு 1,190 ஏரிகள் நிரம்பியது

Published On 2020-12-06 07:58 GMT   |   Update On 2020-12-06 07:58 GMT
கடந்த 2 வாரமாக பெய்து வரும் கனமழையால் சித்தூர் மாவட்டத்தில் 1,190 ஏரிகள் நிரம்பி வழிந்தன. ஏராளமான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருமலை:

சித்தூர் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக போதிய மழை பெய்யவில்லை. விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

சமீபத்தில் வீசிய நிவர் புயலால் 5 ஆண்டுகளுக்கு பிறகு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் குளங்களும் நிரம்பி வழிந்தன.

புரெவி புயலாலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 வாரமாக பெய்து வரும் கனமழையால் சித்தூர் மாவட்டத்தில் 1,190 ஏரிகள் நிரம்பி வழிந்தன. ஏராளமான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

2015-ம் ஆண்டுக்கு பிறகு சித்தூர் மாவட்டத்தில் அனைத்து ஏரிகளிலும், குளங்களிலும் நீர் நிரம்பி உள்ளது.

இதனால் நீர்நிலைகளுக்கு பொதுமக்கள் வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம், தண்ணீரில் இறங்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்தூர் மாவட்டம் ஐராலா அடுத்த குல்லப்பள்ளி கிராமத்தில் மக்கள் பலர் வசிக்கின்றனர். அந்த கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் கடந்த சில நாட்களாக புயல் மழையால் தீப்பிடித்து எரிந்தது. இதனால் கிராமத்தில் மின்தடை ஏற்பட்டது.

இதுபற்றி கிராம மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்து 11 நாட்கள் ஆகிறது.

அதை மின்வாரிய ஊழியர்களும் சரி செய்யவில்லை. 11 நாட்களாக கிராமம் இருளில் மூழ்கி உள்ளது. மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News