செய்திகள்
பதாகையுடன் அமைதியாக இருந்த விவசாயிகள்

’முடியுமா? முடியாதா?’ என்ற பதாகையுடன் மத்திய மந்திரிகளுடனான கூட்டத்தில் அமைதிகாத்த விவசாயிகள்

Published On 2020-12-05 16:04 GMT   |   Update On 2020-12-05 16:04 GMT
மத்திய அரசுக்கும் விவசாய குழு தலைவர்களுக்கும் இடையே இன்று நடைபெற்ற 5-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
புதுடெல்லி:

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 10-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேளாண் குழு தலைவர்கள் - மத்திய அரசு இடையே இன்று 5-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர், உணவுத்துறை மந்திரி பியூஷ் கோயல் மத்திய அரசு சார்பில் பங்கேற்றனர். விவசாயிகள் சார்பில் விவசாய குழு தலைவர்கள் பங்கேற்றனர். 

இந்த பேச்சுவார்த்தை எந்த முடிவுகளும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது. இதனால், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையில் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையின் போது வேளாண் சட்டத்தில் எந்தவித திருத்தமும் தேவையில்லை எனவும் சட்டங்களை உடனடியாக திருப்பப்பெறவேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையும் விவசாயிகள் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற 5-ம் கட்ட பேச்சுவார்த்தையின்போது மத்திய அரசு தனது முடிவை நேரடியாக தெரிவிக்கவேண்டும் விவசாய குழு தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளனர். 

இதற்காக கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தாங்கள் வைத்திருந்த வெள்ளை தாளில் சட்டங்களை திருப்பப்பெற முடியுமா? அல்லது முடியாதா? என்ற கோரிக்கையை வெளிப்படுத்தும் வகையில் ‘முடியுமா? அல்லது முடியாதா? எழுதப்பட்ட பதாகையை காட்டினர். 

அதன்பின் சிறிது நேரம் விவசாயிகள் அந்த பதாகையை காட்டியவாறு
அமைதியாக இருந்தனர். இதனால், கூட்டத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகளின் அந்த கேள்விக்கு மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்கப்படாததால் இரு தரப்பும் சிறிது நேரம் அமைதியாக இருந்துள்ளனர்.

தற்போது 5-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளதால் விவசாயிகள் போராட்டம் உச்சத்தை எட்டலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News