செய்திகள்
விவசாயிகள் போராட்டத்தின் போது உணவு தயாரிப்பு பணிகள்

1 வருடத்திற்கு தேவையான பொருட்களை கொண்டுவந்துள்ளோம் - மத்திய அரசை எச்சரிக்கும் விவசாய குழுக்கள்

Published On 2020-12-05 13:27 GMT   |   Update On 2020-12-05 14:00 GMT
1 வருடத்திற்கு தேவையான பொருட்கள் உள்ளது எனவும் சாலையில் இருந்து போராடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் மத்திய அரசிடம் விவசாய குழு தலைவர்கள் தெரிவித்துள்ளன.
புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை 10-வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 

டெல்லி எல்லையில் திரண்டுள்ள விவசாயிகள் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகிறது.

தினமும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் திரண்ட வண்ணம் உள்ளனர். இதற்கிடையில், விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு ஏற்கனவே 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. அந்த பேச்சுவார்த்தைகள் அனைத்து தோல்வியடைந்தன.

இந்நிலையில், மத்திய அரசு மற்றும் விவசாய குழு தலைவர்களுக்கு இடையே 5-ம் கட்டமாக இன்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

இந்த பேச்சுவார்த்தையில் விவசாய குழு தலைவர்களுடன்  மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர், வர்த்தகம் மற்றும் உணவுத்துறை மந்திரி பியூஷ் கோயல் தற்போது பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். இரு தரப்பும்
தங்கள் நிலைபாட்டை தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசுடனான இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாய குழு தலைவர்கள் கூறியதாவது:-

1 வருடத்திற்கு தேவையான பொருட்களை நாங்கள் கொண்டுவந்துள்ளோம். நாங்கள் கடந்த சில நாட்களாக சாலையில் தங்கியுள்ளோம். நாங்கள் சாலையிலேயே இருக்கவேண்டும் என அரசு விரும்பினால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. 

வன்முறை பாதையில் நாங்கள் பயணிக்கமாட்டோம். போராட்ட களத்தில் நாங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என உளவுத்துறை உங்களுக்கு தெரிவித்திருக்கும்.

விவசாயத்தில் தனியார் துறை எங்களுக்கு தேவையில்லை. இந்த சட்டத்தின் மூலம் அரசாங்கமே லாபம் அடையுமே தவிர விவசாயிகள் அல்ல.

என்றனர்.
Tags:    

Similar News