செய்திகள்
விவசாயிகளின் போராட்டத்தால் மூடப்பட்ட நெடுஞ்சாலை

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடும் விவசாயிகள்- டெல்லியின் முக்கிய எல்லைகள் மூடப்பட்டன

Published On 2020-12-05 03:41 GMT   |   Update On 2020-12-05 03:41 GMT
விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லி மற்றும் எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி:

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் புராரி மைதானத்திலும், டெல்லியின் எல்லைப்பகுதிகளிலும் விவசாயிகளின் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் எல்லை நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். 

விவசாயிகளின் போராட்டம் காரணமாக காசியாபாத்தில் இருந்து டெல்லி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காசிப்பூர் எல்லை (உ.பி.-டெல்லி எல்லை மூடப்பட்டது. கவுதம் புத் தவார் அருகே விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தி வருவதால் நொய்டாவில் இருந்து டெல்லி செல்லும் நொய்டா இணைப்பு சாலையில் சில்லா எல்லை மூடப்பட்டது. 

டெல்லிக்கு வருவோர்,  நொய்டா இணைப்பு சாலையைத் தவிர்க்கவும், டி.என்.டி. சாலையைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திக்ரியில் உள்ள டெல்லி-அரியானா எல்லையிலும் விவசாயிகள் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.

ஜதிகரா எல்லை (டெல்லி-அரியானா எல்லை) இரு சக்கர வாகன போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அரியானா செல்வதற்கு தன்சா, தவுராலா, கபாஷேரா, ரஜோக்ரி தேசிய நெடுஞ்சாலை-8, பிஜ்வாசன் / பஜ்கேரா, பாலம் விஹார் மற்றும் துண்டஹேரா எல்லைகள் வழியாக செல்லலாம் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. விவசாயிகளை சமாதானப்படுத்த மத்திய அரசு இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. இதனால் இன்று விவசாயிகளுடன் மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

மத்திய அரசாங்கத்துடன் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில், உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என்றால் பாராளுமன்றத்தை முற்றுகையிடவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
Tags:    

Similar News