செய்திகள்
வெறிச்சோடி காணப்படும் பேருந்து நிலையம்

கன்னட அமைப்புகள் இன்று பந்த்... தமிழக எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்

Published On 2020-12-05 02:56 GMT   |   Update On 2020-12-05 02:56 GMT
கன்னட அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தமிழக எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பெங்களூரு:

கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா, மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைப்பதாக அறிவித்துள்ளார். அதற்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறி இருக்கிறார். பெலகாவி வி‌ஷயத்தில் கர்நாடகம், மராட்டியம் இடையே எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில், மராட்டிய சமூக மக்களின் வளர்ச்சிக்கு முதல்-மந்திரி அறிவித்துள்ள இந்த திட்டத்தை கன்னட சங்கங்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இந்த முடிவை வாபஸ் பெறக்கோரி கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்தப்படும் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. அதன்படி இன்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. 

பல்வேறு இடங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கன்னட  அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இதனால் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கவில்லை. முழு அடைப்பை ஆளும் பா.ஜனதா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. முழு அடைப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா எச்சரிக்கை விடுத்தார். போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

கன்னட அமைப்புகளின் முழு அடைப்பு போராட்டத்தினால் தமிழக எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. முழு அடைப்பு போராட்டத்தினால் மைசூர், சாம்ராஜ் நகர், கொள்ளேகால் பகுதிக்கு செல்லும் தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இரு மாநில எல்லையில் அமைந்துள்ள தாளவாடி பகுதிக்கு தலமலை வழியாக தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Tags:    

Similar News