செய்திகள்
மந்திரி சுதாகர்

அடுத்த 45 நாட்கள் முக்கியமான காலக்கட்டம்: சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்

Published On 2020-12-05 02:01 GMT   |   Update On 2020-12-05 02:01 GMT
கொரோனா 2-வது அலை தொடங்க அடுத்த 45 நாட்கள் முக்கியமான காலக்கட்டம் ஆகும், அதனால் கொரோனா பரவலை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
பெங்களூரு :

கொரோனா தடுப்பு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆலோசனை குழு உறுப்பினர்களுடன் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் அந்த குழுவின் உறுப்பினர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கொரோனா பரவலின் 2-வது அலை குறித்தும், அது தொடர்பாக எடுக்க வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. இந்த கூட்டத்திற்கு பிறகு மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நடப்பு மாதமான டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய மாதங்கள் குளிர்காலம் ஆகும். கொரோனா 2-வது அலை தொடங்குவதில் அடுத்த 45 நாட்கள் முக்கியமான காலக்கட்டம் ஆகும். பிற நாடுகளின் புள்ளி விவரங்களை ஆய்வு செய்தபோது, அங்கு 45 முதல் 90 நாட்களில் கொரோனா 2-வது அலை தொடங்கியது தெரியவந்துள்ளது. கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை வர வாய்ப்புள்ளதாக ஆலோசனை குழு கூறியுள்ளது. இதை தடுக்க எடுக்க வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா 2-வது அலையை தடுக்க வருகிற 20-ந் தேதி முதல் ஜனவரி 2-ந் தேதி வரை தீவிரமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அடுத்த 15 நாட்கள், கூட்டங்கள், விழாக்களில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். திருமணத்தில் 100 பேரும், அரசியல் கூட்டங்களில் 200 பேரும், துக்க நிகழ்ச்சிகளில் 50 பேரும் மட்டுமே சேர வேண்டும் என்று விதிமுறை அமலில் உள்ளது. இந்த விதிமுறைகளுடன் முகக்கவசம் அணிவது, சமூக விலகலை பின்பற்றுவது போன்றவற்றை சரியான முறையில் அனுசரித்தால், கொரோனா பரவலை தடுக்க முடியும். மக்கள் ஒரு இடத்தில் கும்பலாக கூடுவதை தவிர்க்க வேண்டும். புதிதாக என்னென்ன விதிமுறைகளை அமல்படுத்துவது என்பது குறித்து முதல்-மந்திரியுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

கொரோனாவால் ஏராளமானவர்கள் உயிரிழந்து உள்ளனர். பலர் வேலைகளை இழந்துள்ளனர். இத்தகைய நேரத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் தேவையற்றது. இதை மக்கள் புரிந்து செயல்பட வேண்டும். மக்கள் பொறுப்புடன் நடந்து கொண்டு விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் எப்போதும் தயாராக இருக்கின்றன.

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்தால், மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பரிசோதனையை வருகிற பிப்ரவரி மாதம் வரை அதிகளவில் நடத்தும்படி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தினசரி சராசரியாக 1 லட்சம் பரிசோதனைகள் நடத்தப்படும். கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து வருகிற 3-வது வாரத்தில் கூடி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.
Tags:    

Similar News