செய்திகள்
மந்திரி பசவராஜ் பொம்மை

முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: மந்திரி பசவராஜ் பொம்மை எச்சரிக்கை

Published On 2020-12-04 03:25 GMT   |   Update On 2020-12-04 03:25 GMT
கர்நாடகத்தில் முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
மங்களூரு :

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு மற்றும் உடுப்பி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மாநில உள்துறை மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று காலை மங்களூரு விமான நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் பனம்பூர் பகுதிக்கு வந்து போலீசாருக்காக கட்டப்பட்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கடலோர காவல்படைக்கு கூடுதல் வேகத்துடன் செல்லும் படகு ஏற்பாடு செய்து தரப்படும். நடுக்கடலில் சட்டத்துக்கு புறம்பாக கடத்தல் தொழில் நடைபெறுவதை சகித்துக்கொள்ள முடியாது. அதை கண்காணிக்க கடலோர காவல் படையினர் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் கடத்தல் சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

கடந்த 10 மாதங்களாக மாநிலத்தில் குற்றச் சம்பவங்கள் ஓரளவு குறைந்திருந்தாலும் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக சைபர் கிரைம் மூலம் வங்கி மோசடி சம்பந்தமான புகார்கள் அதிக அளவில் குவிகின்றன. எனவே, மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மக்கள் ஏமாற கூடாது. போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் மங்களூருவில் ‘ஸ்மார்ட் சிட்டி’(சீர்மிகு நகரம்) திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.

மாநகரில் குற்றச் சம்பவங்களை தடுக்க புதியதாக 1,200 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அவை போலீஸ் மூலம் கண்காணிக்கப்படும். மாநிலத்தில் போலீசாருக்கு தேவையான வசதிகளை மாநில அரசு உடனுக்குடன் செய்து கொடுத்து வருகிறது. போலீசார் 24 மணி நேரமும் பணியில் இருப்பதால் அவர்களுக்கு தேவையான வீடு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மாநில அரசு செய்து வருகிறது.

இதுவரை மாநிலத்தில் சுமார் 51 சதவீதம் போலீசாருக்கு அரசு சார்பில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இனிவரும் நாட்களில், அதாவது 2025-ம் ஆண்டுக்குள் 75 சதவீத போலீசாருக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும். அதாவது 16 ஆயிரம் வீடுகள் போலீசாருக்கு கட்டி கொடுக்கப்படும்.

கடந்த 2 வாரங்களாக மங்களூரு நகரில் குறிப்பிட்ட சில இடங்களில் மர்மநபர்களால் பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்டு வருகின்றன. இது சம்பந்தமாக போலீஸ் கமிஷனருடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். விரைவில் அந்த செயல்களில் ஈடுபட்ட நபர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.

மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிற 5-ந் தேதி(நாளை) மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு கன்னட கூட்டமைப்பு சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. போராட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. போராட்டத்தை நடத்துபவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு உள்துறை மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
Tags:    

Similar News