செய்திகள்
பிரியங்க் கார்கே

பாஜக எம்.பி.க்கள் நொறுக்கு தீனி சாப்பிடத்தான் பிரயோஜனம்: பிரியங்க் கார்கே

Published On 2020-12-04 02:53 GMT   |   Update On 2020-12-04 02:53 GMT
பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்க கர்நாடக பாஜக எம்.பி.க்களுக்கு தைரியம் இல்லை என்றும், அவர்கள் நொறுக்கு தீனி சாப்பிடத்தான் பிரயோஜனம் என்றும் பிரியங்க் கார்கே கடுமையாக தாக்கி பேசினார்.
கலபுரகி :

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மந்திரியுமான பிரியங்க் கார்கே நேற்று கலபுரகியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு 25 எம்.பி.க்கள், 3 மத்திய மந்திரிகள் உள்ளனர். ஆனால் அவர்கள் டெல்லிக்கு சென்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள உணவகத்தில் நொறுக்கு தீனிகளை சாப்பிடத்தான் பிரயோஜனம் ஆவார்கள். அவர்கள் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக நின்று கேள்வி கேட்க மாட்டார்கள். பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்க அவர்களுக்கு தைரியம் இல்லை. பா.ஜனதா மேலிட தலைவர்கள் சொல்வதை கைகட்டிக் கொண்டு கேட்டுவிட்டு திரும்பி வருகிறார்கள்.

இதற்காகத்தான் கர்நாடக மக்கள் அவர்களை எம்.பி.க்களாக தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பினார்களா?. பா.ஜனதாவினர் மக்களை ஏமாற்றி, ஊர் சுற்றி வருவதை நிறுத்த வேண்டும். மக்கள் கையில் பணம் இல்லை. அவர்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். பா.ஜனதாவினர் சிலர் மந்திரியாக வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். சிலர் முதல்-மந்திரியாக வேண்டும் என்று நினைக்கிறார்கள். முதல்-மந்திரி எடியூரப்பா தன்னைப்பற்றியே பெருமையாக பேசி வருகிறார்.

கல்யாண கர்நாடகா மக்களை முதல்-மந்திரி எடியூரப்பா ஏமாற்றி வருகிறார். ஒரேநாடு ஒரே தேர்தல் என்று பா.ஜனதா கூறி வருகிறது. அதற்கு பின்னால் பெரிய சதி இருக்கிறது. ஒரே தேர்தலில், ஆயிரக்கணக்கான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வெற்றிபெற்று விடலாம் என்று பா.ஜனதாவினர் நினைக்கிறார்கள். அது நடக்காது.

இவ்வாறு பிரியங்க் கார்கே கூறினார்.
Tags:    

Similar News